

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 650 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 16 பேர் பலியாகினர்.
650 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 603 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 650 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகுடஞ்சாவடியில் 41 பேர், ஓமலூரில் 32 பேர், வீரபாண்டியில் 28 பேர், சேலம் ஒன்றியத்தில் 27 பேர், ஆத்தூரில் 26 பேர், அயோத்தியாப்பட்டணம், சங்ககிரியில் தலா 20 பேர், தலைவாசலில் 17 பேர், வாழப்பாடியில் 16 பேர், எடப்பாடியில் 15 பேர், பனமரத்துப்பட்டியில் 14 பேர், நங்கவள்ளியில் 11 பேர், கெங்கவல்லியில் 8 பேர், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேச்சேரியில் 5 பேர், தாரமங்கலம், கொளத்தூர், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
53 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 650 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 4 ஆயிரத்து 914 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
16 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 55, 43, 63, 53 ஆகிய வயதுடைய ஆண்களும், 43, 67, 38, 63, 55 ஆகிய வயதுடைய பெண்களும் கொரோனாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
39, 75, 62, 49, 77 ஆகிய வயதுடைய ஆண்களும், 61, 65 ஆகிய வயதுடைய மூதாட்டிகளும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது.