மனித உயிர்களைக் காக்கும் முயற்சி

வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்.
மனித உயிர்களைக் காக்கும் முயற்சி
Published on

"உயிரின் மதிப்பை அனைவரும் உணர வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, தலைக்கவசம் அணிவது முக்கியமானது" என்கிறார் காரை கிருஷ்ணா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசிக்கும் இவர், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விழிப்புணர்வு வீதி நாடகங்களை ஒருங்கிணைத்தவர், பட்டிமன்ற பேச்சாளர், 100-க்கும் மேற்பட்ட கவியரங்க மேடைகளை அலங்கரித்தவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தமிழாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

இவர் 'ஒலிக்கட்டும் பறை', 'இப்படித்தான் விடியும்' ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 'குறள் நெறிக்கவி', மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 'சங்கப் புலவர்', தாய் உள்ளம் அறக்கட்டளை சார்பில் 'தமிழ் ரத்னா அண்ணா', உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 'நல்லாசிரியர் மாமணி' போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றவர். இவரிடம் பேசியதில் இருந்து...

விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக நீங்கள் சொல்லும் கருத்துகள் என்ன?

வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக 'விபத்தில்லா தமிழகம் உருவாக வேண்டும்' என்ற தலைப்பில் உருவானது தான் 'சென்னை கூத்துப்பட்டறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்'. போக்குவரத்து காவல்துறை, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூத்துப்பட்டறையின் மாணவ கலைஞர்கள் ஆகியோர் இணைந்து சாலையோரத்தில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறோம்.

இதற்கு பொதுச் செயலர், தொகுப்பாளர் என்ற முறையில் நானும் பல்வேறு யுக்திகளையும், புதிய கருப்பொருளையும் தேர்ந்தெடுத்து திட்டமிட்டு செயல்படுத்துகிறேன். இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தி இருக்கிறோம். என்னுடைய மகனுடன் படித்த நண்பன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தது இன்றும் என் கண்களில் நீங்காத காட்சியாக ரணத்தை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்புதான் என்னை கூத்துப்பட்டறையில் இணையத் தூண்டியது.

ஒருமுறை நாங்கள் சாலையில் விபத்து தொடர்பான விழிப்புணர்வு நாடகத்தை நடத்திக் கொண்டு இருந்தோம். அதை உண்மையான விபத்து என்று நினைத்து, ஒரு தனியார் தொலைக்காட்சி, செய்தியாக ஒளிபரப்பியது. அது இன்றுவரை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும். இவ்வாறு சாலை விபத்துக்களை தத்ரூபமாக செய்து காட்டுவோம். இதை சாலையில் பயணிக்கும் மக்கள் பார்த்துக் கொண்டே கவனமாகச் செல்வார்கள். ஒரு மணிநேரம் வரை நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் ஒரு நாளில் பல நூற்றுக்கணக்கான விபத்துகள் தடுக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வருங்கால சந்ததியினரிடம் இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் விபத்துகள் குறையும்.

கவிதை எழுதுவது குறித்துச் சொல்லுங்கள்?

எனக்கு முதன் முதலில் கவிதை வாசிக்க மேடை தந்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைதான். ஆரம்ப காலங்களில், பொதுமக்கள் முன்னிலையில் கிராமத்தில் கவியரங்கம் எடுபடுமா? மக்களுக்குப் புரியுமா? புரிந்தால்தானே ரசிப்பார்கள் என்று ஆயிரம் கேள்விகள் எனக்குள் உண்டானது. ஆனால், கவிதை எழுதி வாசித்தபோது ஏராளமான பாராட்டுகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இதுவரை இரண்டு கவிதை நூல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்களை எழுதி இருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com