சேதமடைந்த முல்லைப்பெரியாற்று பாலத்தால் விபத்து அபாயம்

கூடலூர் அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள முல்லைப்பெரியாற்று பாலத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த முல்லைப்பெரியாற்று பாலத்தால் விபத்து அபாயம்
Published on

கூடலூர்,

மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் போன்ற ஊராட்சிகள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், உதவித்தொகை, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வாங்குவதற்கு கூடலூரில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தான் வரவேண்டும். அதே போல் இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பிரச்சினை குறித்து புகார் அளிப்பதற்காக கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தான் வர வேண்டும்.

இது தவிர வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்றாலும், மாணவ-மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்றாலும் கூடலூருக்கு தான் வரவேண்டும். கூடலூரில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் தான் குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கின்றனர்.

சேதமடைந்த பாலம்

இவர்கள் அனைவரும் குள்ளப்பகவுண்டன்பட்டி-கூடலூர் இடையே உள்ள சாலை வழியாகத்தான் கூடலூருக்கு சென்று வருகின்றனர். மேலும் தேனி வழியாக குமுளி, தேக்கடி, மூணாறுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் முல்லைப்பெரியாற்றை கடக்கும் வகையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த பாலம் தற்போது சேதமடைந்து உள்ளது. பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூடலூர் செல்ல வேண்டும் என்றால் இந்த பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் அந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ள இடம் தெரிய வாய்ப்பு குறைவு. எனவே அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com