தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் திரண்டு தர்ப்பணம் செலுத்தினர்.
தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Published on: 

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் திரண்டு தர்ப்பணம் செலுத்தினர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்றவை முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து கடல், ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் பக்தர்கள் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால், கடந்த ஆண்டுகொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் கடற்கரையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர்.

கடற்கரைக்கு அனுமதி

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் கன்னியாகுமரி கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். பின்னர், பூஜை செய்த பொருட்களை கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

சாமி கும்பிட்டனர்

பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தை அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

----

X

Daily Thanthi
www.dailythanthi.com