ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், விழாவை கோவிலுக்குள் நடத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Published on

சிதம்பரம்,

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கே.ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் நவமணி தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பா.ஜ.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.

அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

பரபரப்பு

எனவே தமிழகஅரசின் அடுத்த உத்தரவு வந்த பிறகே திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், தாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com