இசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா


இசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
x
தினத்தந்தி 17 Sept 2023 7:00 AM IST (Updated: 17 Sept 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.

டிஸ்க் ஜாக்கி (டி.ஜே.) என்றாலே கேளிக்கை மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பாடல்களை துள்ளல் இசையுடன் வழங்குபவர் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. அதை மாற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேலைப்பளு, கவலைகள் எல்லாவற்றையும் மறக்கச் செய்து இசை வெள்ளத்தில் குதூகலிக்க வைப்பவர் என உணரச் செய்து வருகிறார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தீபிகா. வலைத்தளங்களில் பிரபலமான பெண் டி.ஜே.வாக விளங்கும் இவருடைய பேட்டி..

"எனக்கு இசையை ரசிப்பது மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே திரைப்பட பாடல்களை அதிகமாக விரும்பிக் கேட்பேன். டிரம்ஸ் இசைக்கருவி வாசிக்க கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது "டிரம்ஸ் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இசைக்கும் கருவி. அதற்கு பதிலாக கீபோர்ட், கித்தார் ஆகிய கருவிகளை இசைக்க கற்றுக்கொள்ளலாமே" என்று கூறி என் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதன் பின்பு நான் இசையில் அதிக கவனம் செலுத்தவில்லை.

கல்லூரி படிப்பு முடிந்ததும் எனக்கு திருமணம் நடந்தது. என்னுடைய கணவர் டிஸ்க் ஜாக்கியாக (டி.ஜே.) இருக்கிறார். அவரைப் பார்த்து மீண்டும் எனக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது. அதுவரை டி.ஜே. என்ற துறை குறித்து நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

டி.ஜே. பணியும் இசை அமைப்பது போலதான். அதற்கும் ரிதம் பற்றிய புரிதல் உணர்வு வேண்டும். ஒரு பாடலை, அதன் ராகத்திற்கு ஏற்ற மற்றொரு பாடலுடன் மிக்ஸ் செய்ய வேண்டும். என்னுடைய கணவர் டி.ஜே. செய்யும்போது நான் ஆர்வத்துடன் கவனித்து வந்தேன். அதை பார்த்தவர் "டி.ஜே. செய்வதற்கு கற்றுக்கொள்கிறாயா?" எனக் கேட்டார். நானும் ஆர்வமாக ஒத்துக்கொண்டேன். என் கணவர் முறைப்படி டி.ஜே. கற்றுக் கொண்டார். அதனால் அவரே எனக்கு குருவாக இருந்து கற்றுக் கொடுத்தார். எனக்கு இசை மிகவும் பிடிக்கும் என்பதால் விரைவாக கற்றுக் கொண்டேன்.

7 வருடங்களுக்கு முன்பு, நான் டி.ஜே. கற்றுக் கொண்டபோது தமிழ்நாட்டில் இந்த துறையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமான பெண் டி.ஜே.க்கள் கிடையாது.

அந்த சமயத்தில், டி.ஜே.க்களை பெரிய ஓட்டல்கள், பார்ட்டிகளில்தான் பார்க்க முடியும். அதிலும் 'கப்பிள் டி.ஜே.' என்பது மிகவும் அரிதானது. அதனால் நாங்கள் இருவரும் துணிந்து 'கப்பிள் டி.ஜே.' செய்வது என்று முடிவு எடுத்தோம். அதற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.

எனக்குள் ஆர்வம் இருந்த அளவிற்கு, மேடை குறித்த பயமும் அதிகமாக இருந்தது. அதை போக்குவதற்காக பிரபலமான டி.ஜே. ஒருவரிடம், ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றேன். பின்னர் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒரு கபேயில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் முதன்முதலாக எனது கணவருடன் இணைந்து டி.ஜே. செய்தேன். டி.ஜே. பார்ட்டி என்றாலே ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் புகழ்பெற்ற பாடல்களைத்தான் ஒலிக்கச் செய்வார்கள். நாங்களும் ஆரம்பத்தில் அதைத்தான் செய்து கொண்டிருந்தோம்.

வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டி.ஜே. பார்ட்டி செய்தபோது அங்கிருந்த தமிழர்கள், தமிழ் பாடல்களை இடம்பெறச் செய்யுமாறு கேட்டனர். அதன் பின்னர்தான் டி.ஜே. பார்ட்டிகளில் அதிகமாக தமிழ் பாடல்களை இடம்பெறச் செய்தோம். நாங்கள் தம்பதிகளாக டி.ஜே. செய்து வந்ததால், திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே. செய்வதற்கு அதிக அழைப்புகள் வந்தன. அதேசமயம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விருப்பத்தின் பேரில் தனித்தனியாகவும் டி.ஜே.வாக செயல்படத் தொடங்கினோம்.

கணவருடன் சேர்ந்து டி.ஜே. செய்வது எளிதாக இருந்தது. ஆனால் தனியாக செய்தபோது பதற்றத்தை உணர்ந்தேன். காலப்போக்கில் இயல்பாக செயல்பட ஆரம்பித்தேன். அப்போதுதான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஒன்றில், பெண் டி.ஜே.வாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்டு சிறப்பாக பங்காற்றினேன்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சென்னையில் உள்ள சுற்றுலாத்தலம் ஒன்றில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் டி.ஜே. பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிக்கச் செய்தேன். அந்த பாடலுக்கு நீச்சல் குளத்தில் இருந்தவாறு சுற்றுலாப் பயணிகள் ஆட்டம் போட்டனர். அது குறித்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆனது.

முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து நிகழ்ச்சிகள் மட்டுமே வரும். அந்த சமயத்தில்தான், ஒரு திருமண கண்காட்சி நடந்தது. அதில் திருமண வைபவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள். அதில் எங்களுடைய டி.ஜே. ஸ்டாலையும் அமைத்தோம். அந்த கண்காட்சிக்குப் பிறகு திருமணங்களில் டி.ஜே. பார்ட்டி செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

கொரோனா பரவல் காலகட்டத்துக்கு பின்பு, சென்னையில் 'போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி' ஒன்று காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது போதைப் பொருட்கள் தரும் மகிழ்ச்சியை விட இசை அதிக மகிழ்ச்சி தருவதாக பலரும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் அந்த நிகழ்ச்சியில், டி.ஜே.வாக பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. வாரம் முழுவதும் அனுபவித்த அழுத்தமான பணிச்சூழலில் இருந்து மீண்டு வருவதற்கு அந்த நிகழ்ச்சி உதவியதாக பலரும் தெரிவித்தனர்.

'கொண்டாட்டம்' என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.

நான் டி.ஜே. ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தபோது, எனக்கு முன்னுதாரணமாக கருதுவதற்கு இந்த துறையில் யாரும் இல்லை. ஆனால் தற்போது என்னைப் பார்த்து பல பெண்கள் டி.ஜே. ஆக வேண்டும் என்று கூறுவதை கேட்கும்போது, மனதிற்கு திருப்தியாக இருக்கிறது" என்று உற்சாகமாக கூறி விடைபெற்றார்.


Next Story