புல்லட் புரூப் காபி


புல்லட் புரூப் காபி
x
தினத்தந்தி 9 Oct 2022 1:30 AM GMT (Updated: 9 Oct 2022 1:30 AM GMT)

சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் ‘புல்லட் புரூப் காபி’ செய்முறை குறித்து பார்ப்போம்.

'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் எளிதாகக் கிடைக்கும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார். கீட்டோ உணவு முறை மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு புல்லட் புரூப் காபி.

இதில் முக்கிய மூலப் பொருளாக எம்.சி.டி (மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள்) எண்ணெய் எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புத் தொடர்கள் கொண்ட எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதை தேங்காய் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதில் 50 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…

தேவையான பொருட்கள்:

விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் - 1½ டீஸ்பூன்

சூடான தண்ணீர் - 1 கப்

எம்.டி.சி எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

பசு நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

சூடான தண்ணீரில் காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாகப் பருகலாம்.

புல்லட் ப்ரூப் காபியை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.

குறிப்பு: தண்ணீர் சூடாக இருப்பது அவசியம். அப்போதுதான் எண்ணெய் மற்றும் நெய் நன்றாக உருகி தண்ணீரில் கலக்கும்.


Next Story