ஸ்ட்ராபெர்ரி லட்டு


ஸ்ட்ராபெர்ரி லட்டு
x
தினத்தந்தி 17 Sep 2023 1:30 AM GMT (Updated: 17 Sep 2023 1:30 AM GMT)

சுவையான ஸ்ட்ராபெர்ரி லட்டு, கொண்டைக்கடலை லட்டு ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

பூந்தி தயாரிக்க:

கடலை மாவு - 150 கிராம்

இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - 120 மில்லி

நெய் - தேவைக்கு

சர்க்கரை பாகு தயாரிக்க:

சர்க்கரை - 150 கிராம்

ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது

எசென்ஸ் - தேவைக்கு

சர்க்கரை - 100 கிராம்

தண்ணீர் - 150 மில்லி

பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரிந்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும்போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம்.

கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு' தயார்.

**********

கொண்டைக்கடலை லட்டு

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

தண்ணீர் - 100 மில்லி

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

பிஸ்தா, பாதாம் (பொடித்தது) - தேவைக்கு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கேசரி பவுடர்(ஆரஞ்சு நிறம்) - தேவைக்கு

செய்முறை:

கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். கொண்டைக்கடலை மாவை தட்டையாகப் பிடித்து, அதில் போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தவும். பின்பு அதில் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்துக் கலக்கவும். இந்தக் கரைசல் பாகு பதத்துக்கு வரும்போது கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். இந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது, நெய்யில் வறுத்து பொடித்த பாதாமை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே, உருண்டைகளாகப் பிடிக்கவும். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான 'கொண்டைக்கடலை லட்டு' தயார்.


Next Story