பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி


பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி
x
தினத்தந்தி 8 Oct 2023 1:30 AM GMT (Updated: 8 Oct 2023 1:30 AM GMT)

ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.

யற்கை விவசாயத்தில் ஈடுபடுவதோடு மட்டுமில்லாமல், வேளாண் துறையில் தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகாலட்சுமி. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பது, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று பயணித்து வருகிறார். இவரது பணிகளுக்காக பெண் நம்மாழ்வார் விருது, சிங்கப்பெண் விருது உள்பட மத்திய, மாநில அரசுகளின் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது பேட்டி.

"நான் எம்.எஸ்சி.பி.எட். படித்திருக்கிறேன். 20 வருடங்களாக துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தேன். கடந்த 17 வருடங்களாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மலையாங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். 150 வகையான நெற்பயிர்களை பயிரிட்டு, அரிசி விற்பனையும் செய்கிறேன்.

இயற்கை விவசாயத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

எனது உறவினர்களில் சிலர், இளம் வயதிலேயே புற்றுநோய் மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். பயிர்கள் செழித்து வளர்வதற்காக தெளிக்கப்படும் ரசாயனக் கலவைகள்தான், இத்தகைய நோய்களுக்கு முக்கியமான காரணம் என்பது தெரியவந்தது. இதனால் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து 5 வருடங்கள் பயணித்தேன். அதன்பின்பு, மலையாங்குளம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன். தற்போது அதில் வெற்றி பெற்று, என்னைப்போல இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு விதை நெல் கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்''.

150 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பற்றி எப்படி தெரிந்து கொண்டீர்கள்?

தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒடிசா, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விதை நெல் சேகரித்ததோடு, அவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். நெல் ஆராய்ச்சி கழகங்களுக்கு சென்றும் இதுபற்றி அறிந்து கொண்டேன். பாரம்பரிய விதைகளைப் பயிரிட்டு நான் பயன் பெற்றதோடு மட்டுமில்லாமல், பலருக்கும் அதன் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறி விற்பனையும் செய்து வருகிறேன்.

நீங்கள் மேற்கொண்டு வரும் இயற்கை விவசாய முறை பற்றி சொல்லுங்கள்?

ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.

விவசாயத்தில் பெண் தொழில் முனைவோர்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?

பெண்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிப்பதோடு, அவர்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவுகிறேன். அறுவடை செய்த உணவுப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட, மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். அதைப் பற்றியும் பெண்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

அரிசி ரகங்களும், அதன் பயன்களும்..

ரத்தசாலி அரிசி, சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையைப் போக்கும். பூங்கார் அரிசி கருப்பை கோளாறுகளை நீக்கும். மாப்பிளை சம்பா அரிசி ஆண்மை குறைவை போக்கும். காலாநமக் அரிசி ஆயுளை அதிகரிக்கும். இலுப்பை பூ அரிசி பக்கவாதத்தை குணப்படுத்தும். மணி சம்பா அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. பால் குடல் வாழை அரிசி சிறு குழந்தைகளுக்கும் ஏற்றது.


Next Story