

தேனி:
ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18-ந்தேதி, ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சுமங்கலி பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
வழிபாடு நடத்திவிட்டு தாலிக் கயிறு புதுப்பித்து தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்றும், மழைப்பொழிவு சீராக இருந்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், விவசாயிகள் வாழ்வு செழிக்க வேண்டும் என்றும் வேண்டி கொள்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. கோவில்களும் பூட்டப்பட்டு இருந்தன. இதனால், நீர்நிலைகள் வெறிச்சோடி கிடந்தன. இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்பு வரை கோவில்கள் திறக்கப்பட்டு இருந்தன.
பக்தர்கள் குவிந்தனர்
இந்நிலையில், கொரோனா வைரஸ் 3-வது அலை தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கோவில்களுக்கு பக்தர்கள் வந்து வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
ஆடிப்பெருக்கு நாளான நேற்று கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
அதன்படி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் நீராடவும், வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் விளக்குகளை மிதக்கவிட்டு வழிபட்டனர். மேலும், ஆற்றின் கரையோரம் சிறப்பு வழிபாடு நடத்தி சுமங்கலிப் பெண்கள் புதுத்தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால், கோவிலுக்கு வெளியே பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.