திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது- 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன வழியில் செல்லும் பக்தர்களுக்கு என பிரத்யேக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது- 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Published on

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.

மேலும் கோவிலில் கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன வழியில் செல்லும் பக்தர்களுக்கு என பிரத்யேக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பகலில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தையும் பெருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது.

இதுதவிர திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்றதை காண முடிந்தது. கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com