

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை நடைபெற்றது. பூஜை நிறைவடைந்ததும், 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் குகநாதீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 மணிக்கு வாகன பவனியும் நடைபெற்றது.
மேலும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.