

தீபாவளிக்கு முந்தைய தினத்தில் வரக்கூடிய திரயோதசி திதி அன்று எமதர்ம ராஜாவை வேண்டி ஏற்றப்படும் விளக்கு எம தீபம் (யம தீபம்) ஆகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அகால மரணம் மற்றும் விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், மரண பயம் நீங்கவும் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. எம தர்ம ராஜாவை மகிழ்விக்கும் இந்த தீபத்தை ஏற்றுவதன்மூலம், பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
மஹாளய பட்சத்திற்கு பூலோகம் வந்த பித்ருக்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் தான் பித்ருலோகத்திற்கு புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்” ஆகும். அந்த தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த நாளில் யம தீபம் ஏற்றினால் முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் செல்வார்கள் என்பது ஐதீகம்.
அவ்வகையில் இன்று தீபாவளிக்கு முந்தைய திரயோதசி திதி முழுமையாக இருக்கிற நாள் என்பதால், இன்று (6.11.2026) மாலையில் எம தீபம் ஏற்றவேண்டும். திரயோதசி திதி இன்று காலை 11.59 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 11.44 மணி வரை இந்த நிதி உள்ளது. இன்று மாலை 05:26 மணி முதல் 06:45 மணிக்குள் யம தீபம் ஏற்றுவது நல்லது.
* வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வீட்டின் வெளிப்புறம், அதாவது வாசற்படிக்கு வெளியே அல்லது மாடியில் யம தீபத்தை ஏற்றலாம்.
* ஒரு விளக்கு மட்டும் ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்கை பயன்படுத்தி நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு விளக்கேற்ற வேண்டும்.
* தெற்கு திசை நோக்கி சுடர் எரியும்படி தீபத்தை ஏற்ற வேண்டும். விளக்கும் ஏற்றும்போது பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும். மற்றவர்களும் விளக்கிற்கு முன்புறம் நிற்கக் கூடாது. விளக்கை எடுப்பதாக இருந்தாலும் பின்புறம் இருந்தே எடுக்க வேண்டும்.
* விளக்கை ஏற்றிய பின், அதைத் திரும்பிப் பார்க்கக் கூடாது; அது தானாக எரிந்து குளிரும் வரை விட வேண்டும்.
* விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்களை மீண்டும் வீட்டிற்குள் எடுத்து சென்று பயன்படுத்தக் கூடாது.
* கர்ப்பிணிகள், உடலில் வலி உள்ளவர்கள், நோய் உள்ளவர்கள், காயம் உள்ளவர்கள், புதிதாக திருமணமானவர்கள் யம தீபம் ஏற்றக் கூடாது.
யம தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் நல்லாசியுடன் ஆயுள், ஆரோக்கியம் விருத்தியாகும். யம தீபம் ஏற்றினால் அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும், குடும்பம் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
வட மாநிலங்களில் இந்த நாளை தன்தேராஸ் (தந்தேராஸ்) என்ற பெயரில், தீபாவளி கொண்டாட்டத்தின் துவக்க நாளாக கொண்டாடுகிறார்கள். ஆரோக்கியத்தின் கடவுளான தன்வந்திரி பகவான் அவதரித்த நாள் தன திரயோதசி என்பதால், இந்நாளில் தன்வந்திரி பகவானையும் வழிபடுகின்றனர். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், செல்வத்தின் பாதுகாவலர் குபேரனையும் வழிபடுகின்றனர்.