

திருமலை,
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்று 87 ஆயிரத்து 689 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால், அன்று மூலவருக்கு நடந்த அபிஷேக சேவையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 850 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனையாக கருதி இந்த நாளை ‘அற்புத வெள்ளிக்கிழமை'யாக திருப்பதி தேவஸ்தானம் பதிவு செய்துள்ளது.
பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தனது உறுதியை மீண்டும் நிரூபித்த தேவஸ்தானம், பக்தர்களின் கடும் கூட்ட நெரிசலும், வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தபோதிலும் சிறப்பான திட்டமிடல், துறை வாரியான ஒருங்கிணைப்பின் மூலம் இந்த மகத்தான சாதனையை எட்டி உள்ளது.
மேலும் மூலவர் ஏழுமலையானுக்கு நடந்த அபிஷேக சேவையில் முதல் முறையாக 5 ஆயிரத்து 850 சாதாரண பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு வழங்கப்பட்டது தேவஸ்தான வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு இதன் மூலம் நனவானது. இந்த அரிய தரிசனத்தை பெற்ற பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தினர்.
தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், தேவஸ்தான உயர் அதிகாரி களின் வழிகாட்டுதல்படி தேவஸ்தானத்தின் அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுலபமாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.