கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: வெள்ளி ரிஷப வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: வெள்ளி ரிஷப வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா
வெள்ளி ரிஷப வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாள் விழாவான நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனங்களில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் வீதி உலா வந்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.

நேற்று 5-ம் நாள் விழாவையொட்டி காலை 10.30 மணி அளவில் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பெரிய ரிஷப வாகனம்

தொடர்ந்து இரவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் பெரிய வெள்ளி ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாட வீதியை சுற்றி வருவார்கள். தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது.

மகா தேரோட்டம்

இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் விநாயகர் தேர் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது.

2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரிய தேரான அருணாசலேஸ்வரரின் மகா ரதம் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.

பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் நள்ளிரவு வரையில் தேரோட்டம் நடைபெறும்.

கலசங்கள் பொருத்தும் பணி

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை பஞ்சமூர்த்திகளின் தேர்களில் பொருத்தப்படும் கலசங்களுக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து தேர்களில் கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து தேர்களுக்கு திருக்குடைகள் பொருத்தப்பட்டன.

X