

சென்னை,
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகள் மற்றும் கோவில் திருக்குளங்களில் பொதுமக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் என இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி மாதத்தில் தெய்வ சக்திகள் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும், வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து, மன நிறைவுடன் ஆசீர்வாதம் வழங்கும். மேலும், அவர்களின் ஆன்மாவும் மோட்சம் அடையும் என்பது நம்பிக்கை.
அவ்வகையில் இன்று (12.8.2026) ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். இதனால் நீர்நிலைகள் மற்றும் கோவில் திருக்குளங்களில் பொதுமக்கள் காலை முதலே குவிந்தவண்ணம் உள்ளனர்.
மயிலாடுதுறை துலா கட்டம் காவேரி வடக்கு கரையில் ஏராளமான மக்கள் வருகை தந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை நாளில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் எள், தண்ணீரை இறைத்தும், அரிசி மாவில் பிண்டம் அமைத்தும் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனமும் செய்தனர். இதையொட்டி அதிகாலையிலேயே பாபநாச சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் பக்தர்கள் வருகை தருவார்கள். அங்கு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் சுவாமி தரிசன்ம செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
அவ்வகையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இன்று காலை கோவில் அருகே உள்ள ஹிருத்தாபநாசினி திருக்குளத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த மூலவர் வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் உள்ள செல்வராஜா கணபதி கோவில், மாம்பழத்து அணைக்கரை ஆழ்வார் கோவில் சிவன் கோவில் ஆகிய இடங்களில் பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடி, ஈரத்துணியுடன் பச்சரிசி சாதம் எள் கலந்து மறைந்த பெற்றோர்கள் மற்றும் மூதாதையரை நினைத்து ஆற்றில் மூழ்கிய நிலையில் பலி தர்ப்பணம் செய்தனர்.
திருவட்டாறு அருகே கோதையார், பரளியார் ஆகிய நதிகள் இணைந்து தாமிரபரணியாக உருவெடுக்கும், "குமரி திரிவேணி சங்கமமான " மூவாற்று முகம் பகுதியில் ஏராளமான மக்கள் பித்ரு தர்ப்பண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்தனர். மூன்று ஆறுகள் சங்கம்மிக்கும் பகுதி என்பதால் மூவாற்று முகம் பகுதியில் பிதுர்தர்ப்பணம் செய்ய அதிக அளவில் வருகை தந்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இதில் சந்திர தீர்த்தக்குளம் அருகே பித்துருக்கள் உலகத்தின் தலைவர் என போற்றப்படும் ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. இந்த ருத்ர பாதத்தில் பித்ருக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து சந்திர தீர்த்த குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் 21 ஜென்ம பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ருத்ரபாதம் மண்டபத்தில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுக்க வருகை புரிந்தனர். மண்டபத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து, குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தும், பலி கர்ம பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் ஏடகநாதர் கோவிலில் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்கள். அருகில் உள்ள வைகை ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சோழவந்தான் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தர்ப்பணம் கொடுத்து சென்றவர்களில் பலர், அகத்திக் கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்தனர்.