முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் ஆடி அமாவாசை

முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் கருப்பு எள்ளை சேர்த்துக்கொள்வது மிகவும் புண்ணியம் தரும்.
தர்ப்பணம்
தர்ப்பணம்
Published on

நாளை (12.8.2026) ஆடி அமாவாசை நாள் ஆகும். அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் என இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வருடம் முழுவதும் அமாவாசையில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

ஆடி அமாவாசை

இந்த அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி மாதத்தில் தெய்வ சக்திகள் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும், வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து, மன நிறைவுடன் ஆசீர்வாதம் வழங்கும். மேலும், அவர்களின் ஆன்மாவும் மோட்சம் அடையும்.

அமாவாசை அன்று, சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இருப்பார்கள். சூரிய பகவான், நமக்கு ஆற்றல், வீரம் தரவல்லவர். சந்திரன், மனதுக்கு அதிபதியானவர். ஆடி அமாவாசையில், சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பார்கள். இதனால் ஆடி அமாவாசை மேலும் சிறப்பு பெறுகிறது.

சாஸ்திரங்களில் தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என மூன்று கடன்கள் சொல்லப்பட்டுள்ளன. தேவ கடன் என்பது இயற்கை வளங்களான நீர், காற்று, சூரியன் மற்றும் இறைசக்திக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும். ரிஷி கடன் என்பது ஞானம், ஆன்மிக அறம், வேதங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றை வழங்கிய முனிவர்கள் மற்றும் குருமார்களுக்கு வழங்கும் நன்றிக் கடனாகும்.

கருப்பு எள்

பித்ரு கடன் என்பது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு செலுத்த வேண்டிய நன்றிக் கடனாகும். இதை, மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தீர்க்க வேண்டும்.

முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் கருப்பு எள்ளை சேர்த்துக்கொள்வது மிகவும் புண்ணியம் தரும். ஆடி அமாவாசை அன்று, அருகில் உள்ள புனித நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம்.

காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, தர்ப்பைப் புல், கருப்பு எள், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். முன்னோர்கள் பெயர்களை சொல்லியபடி எள் கலந்த நீரை கீழே விட வேண்டும். குறைந்தது மூன்று தலைமுறை பெயர்களையாவது சொல்வது சிறந்தது.

வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்

நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம். அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படையல் செய்து, பின்னர் காகங்களுக்கு வைக்கலாம். இதன்மூலம் முன்னோர்கள் சாப்பிடுவதாக நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது பல மடங்கு புண்ணியத்தை சேர்க்கும்.

ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம். வாழ்வில் துன்பங்கள் மறைந்து சுபிட்சம் உண்டாகும்.

வாழும்போது பெற்றோரை கவனிங்க..

அதேசமயம், வாழும் காலத்தில் பெற்றோரை மதிக்காமல், அவர்களை கவனிக்காமல், அவர்கள் இறந்த பிறகு கொடுக்கும் தர்ப்பணத்தால் எந்தப் பயனும் இல்லை. வாழும் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் ஆன்மா, இறந்த பிறகும் அமைதி அடையாது. அவர்கள் பசியோடும் வலியோடும் இறப்பதால், அவர்கள் தரும் சாபம் "பித்ரு தோஷமாக" மாறும். இந்தத் தோஷத்தை வெறும் தர்ப்பணம் செய்வதன் மூலம் மட்டும் மாற்றிவிட முடியாது.

இறந்துபோன பெற்றோரின் படங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு, அல்லது அவர்களை நினைத்து, செய்த தவறை உணர்ந்து கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் இனி நல்ல வழியில் நடப்பதாக உறுதி அளித்து அதனை பின்பற்ற வேண்டும். அதன்பின் தர்ப்பணம் கொடுக்கலாம், தான தர்மங்கள் செய்யலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால், பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு செய்யும் பணிவிடையே ஆகச்சிறந்த தர்மம் ஆகும். பெற்றோரை நல்ல விதத்தில் கவனித்து, அவர்களுக்கு அன்போடு கொடுக்கும் உணவானது, அவர்கள் இறந்தபின் காசிக்கு சென்று பிண்டம் கொடுப்பதை விட மேலானது என்பதே நிதர்சனமான உண்மை.

X

Daily Thanthi
www.dailythanthi.com