

திருநள்ளாறு,
ஆடி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட் சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
நேற்று ஆடி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நளன்தீர்த்தகுளத்தில் புனித நீராடிய பக்தர்கள் கலிதீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல் வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.