ஆடி முதல் செவ்வாய்... குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்
Published on

கன்னியாகுமரி,

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வகையில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனால் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர். ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு குமாரகோவில், தக்கலை மற்றும் திங்கள்நகரிலிருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது.

அதன்பிறகு உஷ பூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. காலை10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன்,களபம்,சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

வெள்ளி பல்லக்கில் உள்பிரகார புறப்பாடு

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி, மேளவாத்தியங்கள் முழங்க, கோவிலின் உள்பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

இதேபோல் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள 24-வது சக்தி பீடமான தியாக சௌந்தரி அம்மன் என்ற பத்திரகாளியம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில்,

கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், சுசீந்திரம் தெப்பக்குளம் கருங்காளி அம்மன் கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், உச்சினி மாகாளியம்மன், சுந்தரி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் செவ்வாயை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com