

சென்னை,
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்ற ஆடி மாதத்தில், நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் வகையில் ஆடி 18-வது நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, பொங்கி பெருகி வரும் காவிரிக்கரையோரம் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதியர் நீராடி, பூஜை செய்து வழிபட்டு, மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் ஆகியவற்றை காவிரியில் சமர்ப்பிப்பர். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இந்த விழாவில் அவசியம் பங்கேற்பார்கள். அப்போது புதுப்பெண் தன்னுடைய தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்.
ஆனால் இந்த ஆண்டு காவிரியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. வறண்ட காவிரியில் ஆங்காங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரில் புதுமண தம்பதியர் மற்றம் பொதுமக்கள் நீராடி, ஆற்றங்கரைகளில் காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபட்டனர். புதுமணத் தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றிக்கொண்டனர். இதேபோல் பவானி கூடுதுறையிலும் பலர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் இன்று காலை புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வந்த பெண்கள் காவிரி ஆற்று மணலில் தலைவாழை இலை போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, காப்பரிசி, பழங்கள், மஞ்சள் கயிறு, ஆகியவற்றை வைத்து பக்தியுடன் சாம்பிராணி போட்டு கற்பூரம் ஏற்றி, காவிரி நிறைவாக நீர் வந்து செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, காவிரி அன்னைக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து குடும்பத்தில் மூத்த பெண் சக பெண்களுக்கு மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டி விட்டு ஆசி வழங்கினார். ஆண்களுக்கு கைகளில் மஞ்சள் கயிறு கட்டி விடப்பட்டது. வாழை இலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட காப்பரிசி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் , சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம் பள்ளி, குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜேடர்பாளையம் ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம் சாணார்பாளையம், கொந்தளம் ,வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி தாய் மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி மாதத்தில் கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மகாபாரத கதைகள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாபாரத கதையில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கு நடைபெற்ற 18 நாள் பாரத போரை குறிக்கும் விதமாக இந்த ஆடி 18 பண்டிகையை கொண்டாடுகின்றனர். இறுதி நாளான ஆடி 18ம் நாளான இன்று யுத்தம் முடிந்து, யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரியில் சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடும் விதமாக காவிரி ஆற்றுக்கு வந்திருந்து வழிபாடு நடத்தினார்கள்.
மேலும் பலர் இன்று மதியம் தங்களது குலதெய்வ கோயில்களில் உள்ள ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் இன்று மதியம் சுத்தம் செய்தும், தேங்காய் உடைத்தும் பூஜை செய்தனர்.
பெண்கள் 18 நாட்கள் வீட்டில் முளைக்க வைத்திருந்த நவதானியங்களான முளைப்பாரியை காவிரி ஆற்றிற்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் பூஜை செய்து வழிபட்டபின், ஆற்றில் மிகக் குறைந்த தண்ணீரில் முளைப்பாரியை விட்டனர்.
முன்னதாக பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், புதுமணத் தம்பதிகள் அவர்களது குடும்பத்தினரோடும் வந்திருந்து தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரி ஆற்றில் இருந்த மிக குறைந்த அளவிலான தண்ணீரில் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கும், கன்னிமார் தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் காவிரி கரையோரம் உள்ள மணல் திட்டில் மணல் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார் வைத்து அதில் அருகம்புல் சொருகி வைத்தும், காதோலை, கருகமணி வைத்து, தேங்காய் பழம் வைத்து, மஞ்சள் நூல் வைத்து, பச்சரிசியில் சர்க்கரை கலந்து வாழை இலையில் படையல் போட்டு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுப் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடி 18 பண்டிகை களையிழந்து காணப்பட்டது. குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர்.