ஆடி திருக்கல்யாண திருவிழா... ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடைபெற்ற அம்பாள் தேரோட்டம்

தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் அம்பாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அம்பாள் தேரோட்டம்
Published on

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் 9-வது நாளான இன்று அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கோவிலின் கிழக்கு வாசல் நிலையில் மலர் மற்றும் தோரணங்களால் அலங்காரம் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் அம்பாள் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். ரத வீதியின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, அம்பாளை தரிசனம் செய்தனர்.

கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி சாலை வழியாக மீண்டும் கிழக்கு வாசல் நிலைக்கு வந்தடைந்தது. திருத்தேர் நிலையை அடைந்ததும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாலை மாற்றும் நிகழ்ச்சி

ஆடிப் பூரத்தை முன்னிட்டு நாளை அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி சிவ நிகழ்ச்சி நடைபெற்று, தீர்த்தம் நீராடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நாளை மறுநாள் தபசு மண்டகப்படியில் வைத்து சுவாமி - அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சி காரணமாக, அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் மூலவரை தரிசனம் செய்ய, தீர்த்தம் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருக்கோவில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதுபோல் திருவிழாவில் மிக முக்கிய நிகழ்ச்சியாக, வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் எட்டு மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com