

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ளது 'ஐகோர்ட் மகாராஜா' சுடலைமாட சுவாமி திருக்கோவில். பொதுவாக, தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க மனிதர்கள் நீதிமன்றம் செல்வதுதான் வழக்கம். ஆனால், தன் பக்தனுக்காக தெய்வமே நேரில் வந்து சாட்சி அளித்த நெஞ்சை நெகிழ வைக்கும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுதான் இத்திருத்தலம்.
ஏரல் பகுதியைச் சேர்ந்த நெல் வணிகரான தெய்வத்தடியா பிள்ளை என்பவர், சுற்றுவட்டார ஊர்களில் இருந்து நெல் கொள்முதல் செய்து, தனது மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சாத்தான்குளம் சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். ஒருமுறை, கணபதிசமுத்திரம் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வரும்போது, இரட்டை சுடலைமாட சுவாமி கோவிலைக் கடக்கும் வேளையில் மர்மமான முறையில் ஒரு நெல் மூட்டை காணாமல் போனது. தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதேபோன்று ஒரு மூட்டை நெல் மாயமாவது தொடர்கதையானது.
அப்போது, ஒரு நள்ளிரவில் தெய்வத்தடியா பிள்ளையின் கனவில் தோன்றிய சுடலைமாட சுவாமி, “உன் வண்டியிலிருந்து நெல் மூட்டைகளை எடுத்தது நான்தான். என் எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கத் தவறி விட்டாய்” என்று கூறினார்.
அதற்கு அந்த வணிகரோ, தான் முருகப்பெருமானின் அடியவன் என்றும், தனக்கு உயிர்ப்பலி கொடுத்து பூஜிக்கும் வழக்கம் இல்லை என்றும் இருப்பிடம் தேடி வந்து நெல் காணிக்கை செலுத்தவும் இயலவில்லை என்றும் தன் நிலையை விளக்கினார். அவரின் இயல்பான பேச்சைக் கேட்டு மனம் குளிர்ந்த சுடலைமாடன், “அப்படியானால், வரும் ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று, என் கோட்டையில் இருந்து எட்டாவது மைல் தூரத்தில் உள்ள விளாங்காட்டுப் பகுதிக்கு வா! அங்கே அடர்ந்த பனங்காட்டின் நடுவே ஒற்றையாக நிற்கும் வேப்பமரத்தின் அடியில், புற்றாக நான் எழுந்தருளியிருப்பேன். அவ்விடத்தில் எனக்கு ஓர் ஆலயம் எழுப்பி பூஜித்து வா, உன்னையும் உன் வம்சத்தையும் நான் வாழ வைப்பேன். என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எவ்விதப் பாகுபாடும் இன்றி நீ திருநீறு மட்டும் கொடுத்து அனுப்பு, அவர்களுக்கு வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி மறைந்தார்.
இறைவன் கனவில் சொன்னபடியே, அந்தப் பனங்காட்டு வேப்பமரத்தின் அடியில் பிரமாண்ட புற்று வடிவில் சுடலைமாடன் தோன்றியதால், அங்கேயே அவருக்குக் கோவிலும் எழுப்பப்பட்டது. வேப்பமரத்தின் நிழலில் சுயம்புவாகத் தோன்றியதால் இப்பெருமான் 'வேம்படி மாடன்' என்ற திருநாமம் பெற்றார். மண் பீடமாக வீற்றிருக்கும் இவரைத் தரிசிக்கும் இக்கோவில் 'கீழ்கோவில்' என்று அழைக்கப்படுவதோடு, இதன் மூலவர் சன்னிதி இன்றும் பனை ஓலையால் வேயப்பட்டுக் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.
இவ்வாலயத்தின் கொடை விழா, முற்றிலும் சுடலை மாடனின் நேரடி உத்தரவின் பேரில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆடி அல்லது ஆவணி மாதத்தில் விழா நடத்துவது குறித்துக் கோவில் சன்னிதியில் அமர்ந்து ஆலோசிக்கும்போது, அங்கிருந்து பல்லி சத்தம் எழுப்ப வேண்டும், அந்தப் பல்லி வாக்கை சுடலை ஆண்டவனின் நேரடி உத்தரவாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கான தேதியை உறுதி செய்கின்றனர்.
ஒருவேளை பல்லி சத்தம் எழுப்பவில்லை என்றால், குறித்த நாளோ, மாதமோ கடந்தாலும் கொடை விழா நடத்தப்படுவதில்லை, காலம் கடந்தாலும் பல்லியின் சத்தம் மூலம் உத்தரவு வந்த பிறகே விழா நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சுடலைமாட சுவாமியே அங்கே பல்லி வடிவில் வந்து தனக்கான உத்தரவைத் தருவதாக இப்பகுதி மக்கள் பரவசத்தோடு கூறுகின்றனர்.
ஆறுமுகமங்கலத்தில் வாழ்ந்து வந்த செல்லையா, சுடலைமாடனின் தீவிர பக்தர் ஆவார். நில வரப்புப் பிரச்சினை காரணமாக, செல்லையாவின் தம்பி முறையான ஆண்டி என்பவரை, பக்கத்து நிலத்துக்காரரான சின்னத்துரை என்பவன் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினான்.
உயிருக்குப் போராடிய ஆண்டியை காப்பாற்றச் சென்ற செல்லையாவின் மடியிலேயே அவன் உயிர் பிரிந்தது. ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததால், கொலைப்பழி செல்லையா மீது விழுந்தது. பிரிட்டிஷ் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் (அந்த காலத்தில் பேச்சு வழக்கில் ஐகோர்ட்) விசாரணைக்கு வந்தது.
வக்கீல் வைக்கக் கூட வசதியற்ற செல்லையா, நீதிபதியிடம், "ஐயா, நான் நிரபராதி. இச்சம்பவம் என் சுடலைமாடன் கோவிலுக்கு நேர் கிழக்கே நடந்ததால், அந்தச் சாமிக்குத்தான் எல்லாம் தெரியும்" என்று கண்ணீருடன் கூறினார். “உன் சாமி வந்து சாட்சி சொல்வாரா?” என நீதிமன்றமே கேலி செய்து சிரித்தது.
இதனிடையே, உண்மைக் குற்றவாளியான சின்னத்துரை, ஆண்டி இறந்த அதே இடத்தில் பாம்பு கடித்து உயிரிழந்தான். வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவில், நீதிபதியின் கனவில் மேல்சட்டையின்றி, தலைப்பாகையுடன் தோன்றிய மர்ம நபர் ஒருவர் செல்லையா நிரபராதி என்ற உண்மையை உரைத்தார். மறுநாள் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்கியபோது, ஒரு கம்பீரமான நபர் வெள்ளைக் குதிரையில் வந்து இறங்கினார். முறுக்கு மீசையும், கையில் வேல்கம்புமாக மேல்சட்டையின்றி நின்ற அவரைப் பார்த்து நீதிபதி திகைத்தார். அவர்தான் இரவில் கனவில் வந்தவர்.
வழக்கறிஞர், அவரிடம் “குதிரையில் கம்பீரமாக வருகிறாயே, நீ என்ன ராஜாவா?" என்று கேட்க, "ஆமாங்கய்யா, நான் ராஜாவுக்கெல்லாம் ராஜா, மகாராஜா! என் பெயரே மகாராஜாதான்" என்றார். மேலும், தான் செந்தூர் சண்முகநாதன் பண்ணைவீட்டு காவலாளி என்றும், அன்று ஆறுமுகமங்கலம் வழியே சென்றபோது சின்னத்துரை ஆண்டியைக் கொன்றதை கண்டதாகவும் சாட்சியம் அளித்தார். உண்மைக் குற்றவாளி சின்னத்துரை நாகம் தீண்டி இறந்துவிட்டதையும் உறுதிப்படுத்தினார். சாட்சி சொல்லி முடித்த அடுத்த கணமே அந்த நபர் அங்கிருந்து மர்மமான முறையில் மறைந்தார். அவர் நின்ற சாட்சிக் கூண்டில் இருந்து பிச்சிப்பூவின் (ஜாதி மல்லி) நறுமணம் வெளிப்பட்டது. நீதிமன்றமே ஸ்தம்பித்தது! வியந்த நீதிபதி, செல்லையாவை அழைத்து, “உன் சாமி பெயர் என்ன?” எனக் கேட்க, அவர் 'சுடலைமாடன்' என்றார். மெய்சிலிர்த்த நீதிபதி, செல்லையாவை விடுவித்தார். இவ்வாறு, பிரிட்டிஷ் ஐகோர்ட்டிற்கே நேரில் வந்து சாட்சி சொல்லி, தன் பக்தனின் உயிரைக் காத்ததால், அன்றிலிருந்து ஆறுமுகமங்கலம் சுடலைமாட சுவாமி, 'ஐகோர்ட் மகாராஜா' என்ற திருநாமத்தோடு போற்றப்படுகிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் காவல் தெய்வமாக விளங்கும் ஐகோர்ட் மகாராஜாவுக்கு, பிரத்யேகமாக பொங்கல் வைத்து, பழங்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளைப் படைத்து வழிபடுவது வழக்கம்.
விழா நாட்களில் மங்கள இசையுடன், தெய்வங்களின் வரலாற்றைப் போற்றும் பாரம்பரிய கலைகளான வில்லிசை, கணியான் கூத்து மற்றும் நையாண்டி மேளம் ஆகியவை வழிபாட்டின் முக்கிய அங்கமாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக, நள்ளிரவில் நடத்தப்படும் 'சாமக்கொடை' வழிபாடும், சிறப்புப் படைப்புகளும் இக்கோவிலின் தனித்துவமான சிறப்பம்சங்களாகும்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஆறுமுகமங்கலத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஏரலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.