கல்லூர் மகாலட்சுமி கோவில்

கல்லூரு மகாலட்சுமி கோவிலில் நவராத்திரி விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
கல்லூர் மகாலட்சுமி கோவில்
Published on

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மகாலட்சுமி கோவில். இந்த கோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவில் 'இரண்டாவது கோலாப்பூர்' என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக மகாலட்சுமி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மகாலட்சுமி தேவியின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அந்த பக்தர் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து மகிழ்ந்த மகாலட்சுமி, சுயம்புவாக தோன்றி பக்தருக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்லூர் மகாலட்சுமி கோவில்
திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர்

இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கிய சிறிய வரவேற்பு வளைவு உள்ளது. அதில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தாயார் காட்சி தருகிறார். கருவறையின் வாசலில் துவாரபாலகிகள் மற்றும் அஷ்டலட்சுமிகளின் உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன.

கிழக்கு நோக்கிய கருவறையில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். அவர் அருகில் கருங்கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை நிலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த இடத்தை தோண்டும்போது, அதில் வெங்கடேசப் பெருமாள் சிலை கிடைத்தது. அந்த சிலையே கருவறையில் மகாலட்சுமியின் அருகில் காணப்படுகிறது. கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

கல்லூர் மகாலட்சுமி கோவில்
சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்

கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இருப்பினும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com