

ஈரோடு மாவட்டம் கோமாளிக்கரை பகுதியில் அமைந்துள்ளது செல்லாண்டியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.
கோமாளிக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கும், சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கோவில் கல்வெட்டுகளில் மீன், வில், அம்பு போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. பல்லவ மன்னன் இந்த கோவிலை கட்டிய தாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
கோமாளிக்கரை செல்லாண்டியம்மன், பவானி செல்லாண்டியம்மன், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூர் நாவலடி கருப்பண்ணசாமி செல்லாண்டியம்மன் ஆகிய 3 அம்மன்களும் அக்காள்-தங்கை என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் கோமாளிக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு பெரிய ஓடை இருந்துள்ளது. அந்த ஓடை நொய்யல் ஆற்றில் கலந்துள்ளது. பெரிய ஓடை என்பதால் இங்கு படகு போக்குவரத்து மூலம் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
மைசூரு மகாராஜா இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும், கோவிலுக்கு நிலம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஜமீன்தாரர்கள் கோவிலை பராமரித்து வந்துள்ளனர். மேலும் அந்த காலத்தில் குண்டம் இறங்கியும் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். காலப்போக்கில் சிதிலமடைந்த இக்கோவில் புனரமைக்கப்பட்டு, 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் ஒத்தக்குதிரை என்று இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அதாவது ஒத்தக்குதிரையில் இருந்து கோவிலை நோக்கி செல்லும்போது சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. கோவில் நுழைவு வாசலை கடந்து உள்ளே நுழைந்ததும் விநாயகரை தரிசிக்கலாம். அருகில் சப்தகன்னிகைகள், கருப்பசாமி, முனீஸ்வரன் வீற்றிருக்கிறார்கள்.
கருவறையில் செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு வெளியே காவல் தெய்வங்களான நீலி, நீலகண்டி உள்ளனர். அம்மனை தரிசித்து விட்டு கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது பிராம்மிகி, சாமுண்டி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி போன்ற தெய்வங்களின் தரிசனம் கிடைக்கும். வெளிபிரகாரத்தை சுற்றி வரும்போது கன்னிமூல கணபதியும், முருகரும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் செல்லாண்டியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தீபத்தூணும் உள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகு இங்கும் தீபம் ஏற்றப்படுகிறது.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் தேர்த் திருவிழா, குண்டம் விழா நடைபெறுகின்றன. 20 இனமக்கள் செல்லாண்டியம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த திருத்தலத்தில் ஆதிகாலத்தில் இருந்தே கவுளிவாக்கு மற்றும் பூ வாக்கு கேட்கும் மரபு இன்றளவும் நடைபெற்று வருகிறது. எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் பக்தர்கள் அம்மனிடம் அருள் வாக்கு கேட்டு அதன்படியே செயல்படுகிறார்கள்.
இந்த கோவிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் ரோட்டில் 28 கி.மீ. தூரம் சென்றால் ஒத்தக்குதிரை என்ற ஊரை அடையலாம். அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலமாக 2 கி.மீ. தூரம் அதாவது கே.மேட்டுப்பாளையம் வழியாக சென்றால் கோவிலுக்கு செல்லலாம்.