

தமிழ்நாட்டின் சிறப்புமிக்க சிவத்தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது, திருக்குற்றாலநாதர் திருக்கோவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற குற்றாலம் அருவியின் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. நடராஜரின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான சித்திர சபை அமைந்துள்ள தலமாகவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது. இங்குள்ள இறைவன் 'குற்றாலநாதர் என்றும், இறைவி 'குழல்வாய்மொழி' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கயிலாயத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அந்த தெய்வீக நிகழ்வைக் காண தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் என எண்ணற்றோர் வடதிசையில் கூடினர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயரத் தொடங்கியது. அப்போது பூமியின் சமநிலையை நிலைநிறுத்துவதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தென்பகுதிக்குச் செல்ல பணித்தார். மேலும், அங்கு தமது திருமணக் கோலத்தை காண செய்வதாகவும் வாக்களித்தார்.
அதன்படி, அகத்தியர் தென்பகுதிக்குச் சென்று பொதிகை மலைக்கு அருகிலுள்ள அருவியில் நீராடி, அப்பகுதியில் இருந்த ஒரு கோவிலுக்குள் செல்ல முனைந்தார். ஆனால் அது வைணவக் கோவில் என்பதால், அகத்தியரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மனம் வருந்திய அகத்தியர், அருகிலுள்ள இலஞ்சி திருத்தலத்துக்குச் சென்று அங்கிருந்த முருகப்பெருமானை வழிபட்டார். அப்போது முருகப்பெருமான், அகத்தியரை வைணவர் வேடம் பூண்டு அந்தக் கோவிலுக்குள் செல்லும்படி அருளினார்.
அதன்படி வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் சென்ற அகத்தியர், கருவறையில் விஷ்ணு, சிலை வடிவில் எழுந்தருளியிருப்பதை கண்டார். அப்போது சிவனை மனதில் நினைத்து, சிலையின் தலையில் தமது கரம் வைத்து அழுத்தியதும், விஷ்ணுவின் சிலை சுருங்கி சிவலிங்கமாக மாறியது என புராணம் கூறுகிறது. அந்த நேரத்தில் அகத்திய முனிவருக்கு சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக் கோலத்தில் அருட்காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அகத்தியர் தமது கரத்தை வைத்து இறைவனை சிவலிங்க ரூபமாக மாற்றியதன் நினைவாக, அந்த லிங்கத் திருமேனியில் அவரது ஐந்து விரல்களின் அடையாளம் பதிந்திருப்பதை இன்றும் காணலாம், விஷ்ணுவின் சிலை சிவலிங்கமாக மாறியதுபோல், ஸ்ரீதேவி குழல்வாய்மொழி அம்மனாகவும், பூதேவி பராசக்தியாகவும் அருளுருவம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மலைகள் சூழ்ந்த இயற்கை அழகின் மத்தியில் உள்ள திருக்குற்றாலம், ஆன்மிகமும் இயற்கையும் ஒன்றாக கலந்த புனிதத் தலமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் 'திரிகூட மலை' என்ற பெயராலும் அறியப்படுகிறது.
சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் நான்கு திசைகளிலும் வாசல்களுடன் தனித்துவமான சங்கு வடிவமைப்பில் கோவில் அமைந்துள்ளது. புராண மரபுகளின்படி, திருமால் தலமாக இருந்தபோது இக்கோவில் சங்கு வடிவில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றால மலையில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையில், அருவியின் மேற்பகுதியிலிருந்து ஆலயத்தை நோக்கினால் சங்கு போன்ற அமைப்பு தெரியும்.
'கு' என்றால் பிறவிப்பிணி' என்றும், 'தாலம்' என்றால் நீக்கி விடுவது' என்றும் அர்த்தம். திருக்குற்றாலத்தில் உள்ள இறைவனை பக்தியுடன் வழிபட்டால் பிறவியால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இறைவன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘திரிகூடநாதர்' என்றும், 'குற்றாலநாதர்' என்றும் போற்றப்படும் இறைவன், இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவாமி சன்னிதியின் வலதுபுறத்தில் குழல்வாய்மொழி அம்மன் சன்னிதி உள்ளது.
கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் பராசக்தி பீடத்தை தரிசிக்கலாம். அதிகார நந்தி, சூரிய பகவான், அகத்திய முனிவர் (கும்பமுனி) ஆகியோரின் சன்னிதிகளையும் காணலாம். கோஷ்ட மூர்த்தியாக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்க, அருகில் விநாயகர் மற்றும் சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன. இதனுடன், பஞ்சபூத லிங்கங்களின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். நன்னகரப் பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள். இத்தலத்தில் உள்ள வடவருவியில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை நாளில் கோவில் முழுவதும் 1008 தீபங்கள் ஏற்றி நடைபெறும் 'பத்ரதீப விழா' மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அந்த நாளில் ஏற்றப்படும் தீபங்களால் கோவில் முழுவதும் ஒளிமயமாக காட்சியளிக்கும். நவராத்திரி நாட்களில் பராசக்திக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் திருவாதிரை விழா, தை மாதத்தில் மகம் நாளை முன்னிட்டு நடைபெறும் தெப்ப உற்சவம் போன்ற திருவிழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
புத்தித் தெளிவு குறைபாடால் அவதிப்படுபவர்கள், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருக்குற்றால அருவியில் நீராடி குற்றாலநாதரை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இத்தல இறைவனை தரிசிப்பதால் உடல் மற்றும் மனக் குறைகள் நீங்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், நீண்ட காலமாக தீராத தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, தைலப் பிரசாதத்தை பெற்றுச் செல்லும் வழக்கம் உள்ளது. அந்தத் தைலத்தை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைவலி குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
தென்காசி மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு இடையில் இத்தலம் அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து தென்மேற்கே சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.