

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவதலம்தான், மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில். 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் முக்கிய பொறுப்பில் இருந்த பரஞ்சோதி என்பவர் இக்கோவிலைக் கட்டி முறைப்படி பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்த கருங்கற்களால் ஆன மூன்று நிலை ராஜகோபுரம் வித்தியாசமாக காட்சி தருகிறது. அதனை வணங்கி உள்ளே நுழைந்தால் கொடிமரத்தையும், நந்தியெம்பெருமானையும் காணலாம். ராஜகோபுரத்தை ஒட்டி கோவிலின் உள்ளே வலது, இடதுபுறங்களில் சூரியன் மற்றும் சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.
கிழக்கு திசை நோக்கி அமைந்த கருவறையில் ஸ்ரீமல்லிகேஸ்வரர் லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. தெற்கு திசை நோக்கி மல்லிகேஸ்வரி அம்பாளுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியில் அம்பாள் ஸ்ரீமல்லிகேஸ்வரி நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக காட்சி தந்து அருளுகிறார்.
அருகில் நடராஜருக்கு ஒரு தனிச் சன்னிதியும் அமைந்துள்ளது. கருவறையின் வெளிப்புற கோஷ்டங்களில் விநாயகர், தட்சி ணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை முதலான தெய்வங்கள் காணப்படுகிறார்கள். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.
திருச்சுற்றுப் பிரகாரத்தில் கமல விநாயகர் சன்னிதியும் அருகில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலான சைவப்பெரியோர்கள் ஐவர் ஒரு தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு கடந்தால் அருகில் ஸ்ரீபிரணவ கணபதி சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியை அடுத்து காசி விஸ்வநாதரும், காசி விசாலாட்சி அம்பாளும் காட்சி தருகின்றனர். அருகில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி உள்ளது. தொடர்ந்து கால பைரவர் சன்னிதியும், அருகில் நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன.
பக்தர்கள், இத்தலத்திற்கு வந்து ஈசனையும், அம்பாளையும் மனமுருகி வழிபட்டால் விரைவில் அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறுகிறார்கள்.
இத்தலத்தில் பிரதோஷம், பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள், கார்த்திகை மாதத்தில் கடைசி சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம், மார்கழியில் பிரம்மமுகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் முதலான உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். மாமல்லபுரத்தில் மேற்கு ராஜ வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இத்தலம் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி முதலான பல பகுதிகளிலிருந்து மாமல்லபுரத்திற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.