பிரதோஷ வழிபாடு தோன்றிய தலம்

பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்
Published on

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை பெரும்பாலான கோவில்களில் லிங்க வடிவிலும், நடராஜர் ரூபத்திலும் தரிசனம் செய்திருப்போம். ஆனால், சயன கோலத்தில் சிவபெருமான் காட்சி தரும் அரிதான கோவில் ஆந்திராவில் உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குதான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார்.

தல புராணம்

தேவர்களும் அசுரர்களும் இணைந்து வாசுகி பாம்பை கயிறாக திரித்தும், மந்திர மலையை மத்தாக மாற்றியும் பாற்கடலை கடைந்தபோது, வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. அதனால், தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். இந்த விஷத்தால் அனைத்து உலக உயிர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டது. உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார். மிகக்கொடிய விஷம் என்பதால் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்தி பிடித்தார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்று விட்டது. இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன்' என்ற பெயர் உண்டானது.

அதன்பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, விஷத்தின் வீரியத்தால் சிவபெருமானுக்கு லேசான மயக்கமும் தலைச்சுற்றலும் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து படுத்து (சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளி எனும் இந்த கிராமம் என்று தல புராணம் சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவபெருமான் இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதி தேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

பிரதோஷத்தின் தாய் தலம்

இக்கோவிலில் பிரதோஷக்கால வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பிரதோஷ வழிபாடு முதன்முதலில் தோன்றிய தலம் இதுவே. இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பிரதோஷ வழிபாட்டுப் பலன்: இக்கோவிலில் பிரதோஷ நாளில் செய்யப்படும் வழிபாடு, ஆயிரம் மடங்கு பிரதோஷ வழிபாட்டிற்குச் சமமான பலனைத் தரும் என்பது ஐதீகம். பிரதோஷ வழிபாடு செய்வதால் கடன் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் முற்றிலும் விலகும். சனிப்பிரதோஷத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தல சிவபெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பிரதோஷம் அன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அமைவிடம்

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 59 கி.மீ. தொலைவில் சுருட்டப்பள்ளி எனும் இடத்தில் கோவில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com