

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை எனும் இடத்தில் அமைந்துள்ளது, சதாசிவ மூர்த்தி திருக்கோவில். இத்தல இறைவன் 'சதாசிவ மூர்த்தி' என்றும், இறைவி 'சிவகாமி' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது. ஒரு சமயம் நடராஜர் குடிகொண்டிருந்த சிதம்பரம் உள்ளிட்ட சோழ நாடும், பாண்டிய நாடும் சமணர்களின் ஆளுகைக்கு உள்ளானது. அப்போது நடராஜர் விக்ரகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று எண்ணிய சிவ பக்தர்கள், சிலையை அடர்ந்த காட்டிற்குள் மறைத்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி ஐந்து சிவ பக்தர்கள், ஒரு வளர்பிறையில் நல்ல நாள் பார்த்து, நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு தென்திசை நோக்கி வந்தனர். அவ்வாறு திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தை கடந்து, புளியமரங்கள்
நிறைந்த வனத்தை அடைந்தனர். பெரிய மலைகளும், பசுமை சூழ்ந்த மரங்களும் நிறைந்த அப்பகுதி சிவ பக்தர்களுக்கு பிடித்துப்போக, நடராஜர் சிலையை மறைத்து வைக்க இதுவே சரியான இடம் என முடிவு செய்தனர். அங்கு, புளியமரப் பொந்தில் நடராஜர் சிலையை மறைத்து வைத்து, ஐவரும் சிதம்பரம் திரும்பினர்.
சில நாட்கள் கழித்து, அந்த புளிய மரத்தின் உரிமையாளர் கண்ணில் நடராஜர் சிலை தென்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், தினமும் அந்த நடராஜருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். காலப்போக்கில் சைவ சமயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதனால் சிதம்பரம் சிவ பக்தர்கள், நடராஜர் சிலையை தேடி வந்தனர். அவர்கள், இங்கு வந்து சிலையை மீட்டுச் சென்றனர்.
ஆனால் இது தெரியாமல் வழக்கம் போல் நடராஜரை வழிபட வந்த உரிமையாளர், சுவாமியின் சிலை அங்கில்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், சுவாமி மீண்டும் அங்கு எழுந்தருள வேண்டினார். அவரின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், அங்கு லிங்க வடிவில் சுயம்புவாக தோன்றினார். இச்செய்தி அப்பகுதி மன்னனுக்கு தெரியவர, அவர் இவ்விடத்தில் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.
சிவபெருமான் புளிய மரத்தடியில் காட்சி அளித்ததால், இத்தலம் 'புளியரை' என அழைக்கப்பட்டது. கோவிலுக்கு செல்ல 27 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 27 படிகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், இந்த 27 படிகளையும் ஏறிச் சென்று இங்குள்ள சுவாமியை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மூலவரான சிவபெருமான், 'சதாசிவ மூர்த்தி' எனும் திருநாமத்தில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு மூலவராக சதாசிவ மூர்த்தி இருந்தாலும், தட்சிணாமூர்த்தியே மிகவும் போற்றப்படுகிறார்.
சுற்றுப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சுப்பிரமணியர், பைரவர், நாகர், சந்திரன், சப்த கன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கோவில் தல விருட்சமாக புளியமரமும், தல தீர்த்தமாக 'சடாமகுடம்' தீர்த்தமும் உள்ளன.
இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், சிதம்பரம் கோவிலில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி, தொழிலில் சிறக்கவும் இத்தல இறைவன் அருள் வழங்குகின்றார். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை படைத்து, முல்லைப்பூ சூட்டி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுகிறார்கள். வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த ஆலயத்தில் தை மாதம் 10 நாள் திருவிழா, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் புளியரை சதாசிவ மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது.