

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் 'சாந்தநாதர்' என்றும், இறைவி 'வேதவல்லி' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கி.பி.11-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இத்தலம், 'குலோத்துங்க சோழீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக சுவாமி சன்னிதியின் மேல் உள்ள விமானத்தில் கல்வெட்டு காணப்படுகிறது. பிற்காலத்தில் 'சார்ந்தாரைக் காத்த நாயனார் கோவில்' என்று பெயர் பெற்றதுடன், தற்போது 'சாந்தநாத சுவாமி கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சோழர் மற்றும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன.
இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் நுழைவுவாசலில் ரிஷபரூடராக காட்சியளிக்கும் சிவன் - பார்வதி சுதை சிற்பங்கள் உள்ளன. நுழைவு வாசலை கடந்து சென்றால் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. அடுத்துள்ள மண்டபத்தில் பலிபீடம், நந்தி, கொடிமரம் ஆகியவை அமைந்துள்ளன.
கருவறையில் சிவபெருமான், சாந்தநாதர் எனும் திருநாமத்துடன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் தாமரை பீடத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலில் நந்தி பகவான் வீற்றிருக்கிறார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகிறார்கள்.
நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அன்னை, 'வேதவல்லி' எனும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் அண்ணாமலையார், பிரம்மா, சூரிய பகவான், சந்திரன், சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், சரபேஸ்வரர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர் விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர் -பர்வதவர்த்தினி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
கோவிலின் வடக்கு பகுதியில் தல தீர்த்தமான 'பல்லவன் குளம்' அமைந்துள்ளது. குளத்தின் தென்கரையில்
ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. இங்கு பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 12 சனிக்கிழமைகள் துளசி மாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும், வடை மாலை சாற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்பொழுது, இக்கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கிறார்கள். இதன்மூலம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குடும்பப் பிரச்சினை விலகவும், கடன் தொல்லை தீரவும், மன அமைதி கிடைக்கவும் இத்தல இறைவனான சாந்தநாதரை வழிபட்டு செல்கிறார்கள்.
அமாவாசையன்று, இங்குள்ள பல்லவன் குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் பிதுர்தோஷம் மற்றும் முன்வினை பாவம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பல்லவன் குளம், காசியில் பாயும் கங்கை நதிக்கு நிகரான தீர்த்தமாக கருதப்படுகிறது. எனவே, இங்கு வழிபடுவோருக்கு காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணிய பலன் ஒருசேர கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆனி மாதம் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், தைப்பூசம், மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.