மானிடராக அவதரித்து அரக்கனை அழித்த சிவபெருமான்... ஜேஜூரி கண்டோபா கோவில் சிறப்புகள்

முக்கிய பண்டிகைகளின் போது, ​​பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.
ஜேஜூரி கண்டோபா கோவில்
ஜேஜூரி கண்டோபா கோவில்
Published on: 

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஜேஜூரி நகரில் உள்ள சிறிய குன்றின் மீது, மாநிலத்தின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் கண்டோபா கோவில் அமைந்துள்ளது.

இங்கு அருளும் 'கண்டோபா' தெய்வம், சிவபெருமான் எடுத்த மனித அவதாரம் என்று கூறப்படுகிறது. இத்தெய்வம், மராட்டிய மற்றும் தக்காணப் பகுதி விவசாயக் குடும்பங்கள் மற்றும் 'தங்கர்' என்ற பழங்குடியின மக்களின் குலதெய்வம் ஆகும்.

சிவபெருமானின் அவதாரம்

சிவபெருமானுக்கு 64 வகையான வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பைரவ அவதாரம். அந்தப் பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, மார்த்தாண்ட பைரவர். இந்த மார்த்தாண்ட பைரவரின் வடிவமாகவே 'கண்டோபா' அவதரித்ததாக இந்த ஆலயத்தின் தல புராணம் கூறுகிறது.

அரக்கர்களான மணி, மல்லன் சகோதரர்கள், தங்களின் கடுமையான தவத்தின் மூலம் பிரம்மதேவனிடம் பல வரங்களைப் பெற்றனர். அதனால் தம்மை அழிக்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் பூமியில் உள்ள மக்களை எல்லாம் துன்புறுத்தினர்.

அரக்கனை வதைத்த இறைவன்

தங்களைக் காப்பாற்றும்படி இறைவனை மக்கள் சரணடைந்தனர். அதையடுத்து சிவபெருமான், மனிதனாக பூமியில் அவதரித்தார். கண்டோபா என்ற பெயரில் ஓர் அரச வம்சத்தில் தோன்றிய அவர், ஜேஜூரி காட் பகுதியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.

மணி, மல்லன் ஆகிய இரு அரக்கர்களையும் போருக்கு அழைத்தார் கண்டோபா. அப்போது மனித உருவில் வந்தது இறைவன் என்பதை உணர்ந்த மணி, அவரது பாதம் பணிந்து மன்னிப்பு கோரினான். அவனது தவறுகளை மன்னித்து இறைவன் அவனுக்கு முக்தியளித்தார். மல்லன் தொடர்ந்து கண்டோபாவை எதிர்த்து போரிட்டான், இறுதியில் இறைவன் அவனை வதைத்தார். அசுரர்களை கண்டோபா அழித்ததை கொண்டாடும் வகையில் ஜெஜூரி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

அகல்யாபாய் ஹோல்கர் என்பவர், 17-ம் நூற்றாண்டில் ஜேஜூரி மலைக்கோட்டை வளாகத்தில் கண்டோபாவுக்கு கோவில் கட்டினார். பிற்காலத்தில் வந்த பேஷ்வாக்கள், இந்தக் கோவிலை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 718 மீட்டர் (2,356 அடி) உயரம் கொண்ட ஜேஜூரி மலைக்குன்றின் மீது கோட்டை போன்ற அமைப்புடன் இக்கோவில் அமைந்திருக்கிறது. கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குத் திசைகளில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக கோவிலை அடையலாம். மேலே செல்லும் ஒரு பாதையில், கண்டோபாவின் அமைச்சரான ஹெகாடி பிரதானின் சன்னிதியைக் காணலாம்.

கீழே இறங்கும் பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு பாதையில், கண்டோபாவின் இரண்டாவது மனைவியான பனாயின் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் சிவலிங்கமும், கண்டோபா மற்றும் அவரது முதல் மனைவி மல்சா தேவி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் போர்க்கடவுள் என்பதால் கையில் வாளுடன் அருள்புரிகிறார்.

தீபத்தூண்கள்

மலைக்குன்றின் உச்சியில் உள்ள முதன்மைக் கோட்டை வளாகத்திற்குச் செல்லும் கல் பாதைகள் மற்றும் படிக்கட்டுகளின் இருபுறமும் சுமார் 350 கல் விளக்குத் தூண்கள் வரிசையாக அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் இந்த தீபத்தூண்களில் விளக்கேற்றப்படும். அப்போது அப்பகுதி முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.

கோவிலின் மைதான பகுதியில் பித்தளை முலாம் பூசப்பட்ட ஒரு பெரிய ஆமை சிற்பம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும், குதிரை மீது போர்வீரராக அமர்ந்திருக்கும் கண்டோபாவின் சிலையும் உள்ளது. கண்டோபாவை வழிபடுவதற்கு பக்தர்கள் மஞ்சள், வில்வ இலையை பயன்படுத்துகிறார்கள். பக்தர்கள் மஞ்சளை காற்றில் தூவி வழிபடுவதால், மலைக்கோவில் வளாகம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.

திருவிழாக்கள்

இக்கோவிலில் பண்டாரா திருவிழா, கண்டோபா யாத்திரை மற்றும் சோமாவதி அமாவாசை திருவிழா உட்பட பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. முக்கிய பண்டிகைகளின் போது, ​​பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.

மராட்டிய அரசால் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜேஜூரி கோட்டை, புனே நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கோவில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

X