

இந்தியாவின் இதயமாக இயங்கும் மும்பையின் புறநகர்ப்பகுதியான தானேயில் அமைந்திருக்கிறது, கோபினேஷ்வரர் கோவில். இத்தலத்து இறைவன் கோபினேஷ்வரர், தானேவின் காவல் தெய்வமாக கருதப்படுகிறார்.
மிகவும் நெருக்கடியான இடத்தில், மிகச் சிறிய நுழைவாயிலுடன், வெளியே தெரியாத மாதிரி உள்ளது இக்கோவில். ஆனால் இந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால், சுமார் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கும் ஆலயம் ஆச்சரியப்படுத்தும்.
இந்த ஆலயத்தை கி.பி. 810-ம் ஆண்டு முதல் 1240-ம் ஆண்டு வரை, தானே பகுதியை ஆட்சி செய்த சில்ஹாரா வம்ச அரசர்கள் கட்டியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த வம்சத்து வழி வந்த அரசர்கள் அனைவரும் சிறந்த சிவபக்தர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஆரம்பத்தில் சிறியதாகவே இருந்த இந்த ஆலயத்தை, கி.பி. 1760-ம் ஆண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சுபேதார் ராமோஜி மகாதேவ், விரிவாக்கம் செய்துள்ளார். பின்னர் 1879-ம் ஆண்டு, இந்தப் பகுதி மக்களால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
நுழைவாயிலைக் கடந்து கோவிலுக்குள் நுழைந்ததும், மிகப்பெரிய நந்தி பகவான் எழுந்தருளியிருக்கிறார். நந்தியை வணங்கி கடந்து சென்றால், மகா மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தை ஒட்டி சில படிகள் கீழிறங்கிச் செல்லும். அதன் வழியில் சென்றால், மூலவரான கோபினேஷ்வரர் சன்னிதியை அடையலாம். கருவறைக்குள் 4 அடி 3 அங்குலம் உயரம், 12 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்க வடிவமாக, கோபினேஷ்வர் அருள்பாலிக்கிறார். மராட்டிய மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
இந்த கோபினேஷ்வரரின் சிவலிங்க வடிவம், இவ்வாலயத்தை கட்டிய மன்னர்களால் செதுக்கி உருவாக்கப்பட்டது அல்ல. இறைவன் அருளால் கிடைத்த சிவலிங்கத்தையே இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆம். இந்த ஆலய வளாகத்தை ஒட்டி, 'மசுண்டா ஏரி' என்ற ஏரி காணப்படுகிறது. பெருமழைக் காலம் ஒன்றின்போது அங்கு ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தக் கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிவலிங்கத்துக்கு பகல் 12 மணி வரை பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அதோடு வில்வ இலை சூட்டியும் வழிபடலாம். இப்படிச் செய்பவர்களுக்கு மனக்கவலை நீங்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலய வளாகத்தில் சிவன் சன்னிதியைத் தவிர, காளிகாதேவி, ராமர், சீதளாதேவி, உத்தரேஷ்வர் (காசி விசுவநாதர்), காயத்ரிதேவி, மாருதி, பிரம்மதேவர், தத்தாத்ரேயர் ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் ஒன்று, மகா சிவராத்திரி. அந்த நாளில் ஆலயம் வெகு அழகாக அலங்கரிக்கப்படும். அப்போது நகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும். அதுதவிர ஆடி மாத திங்கட்கிழமைகளில் ஷ்ரவண சோமவார விழாவும், அனுமன் ஜெயந்தி, ராம நவமி உள்ளிட்ட விழாக்களும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
தானே நகரின் ஜாம்ப்லி நாகா பகுதியில் கோவில் அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெறும்.