வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்

தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு ‘நந்தி விழா’ கொண்டாடப்படுகிறது.
வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்
நெய் நந்தீஸ்வரர் கோவில்
Published on

நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த தலமாக உள்ளது, வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வேந்தன்பட்டி. இங்குள்ள சிவன் கோவிலில் நந்தி எம்பெருமான், நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் மூலவரான சிவபெருமான் "சொக்கலிங்கேஸ்வரர்' என்றும், தாயார் 'மீனாட்சி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள நெய் நந்தீஸ்வரரே மிகவும் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

தல சிறப்பு

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வூர் அடர்ந்த காடாக இருந்துள்ளது. இவ்விடத்தை ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஒரு சமயம் பக்கத்து ஊரைச் சேர்ந்த வேந்தப்பன் என்பவர், இப்பகுதியை திருத்தி, தனது ஊரில் இருந்து முப்பது குடும்பங்களை குடியமர்த்தினார். பின்னர், பெரிய குளம் ஒன்றை வெட்டி, அதன் கரையில் சிறிய பிள்ளையார் கோவிலையும், சற்று தொலைவில் முருகன் கோவிலையும் கட்டினார். காடாக கிடந்த இவ்விடம் வேந்தப்பன் என்பவரின் முயற்சியால் கிராமமாக உருவானதால், இக்கிராமத்திற்கு 'வேந்தன்பட்டி' என பெயர் வைத்தனர்.

காலப்போக்கில் இவ்வூர் மக்களுக்கு சிவன் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி கோவில் கட்டும் பணியையும் தொடங்கினர். அக்காலத்தில் புதுக்கோட்டை அருகிலுள்ள கொடும்பாளூரில் பெரிய நந்தி சிலைகள் செய்வது வழக்கம். இதை கேள்விப்பட்ட இவ்வூர் மக்கள், கொடும்பாளூர் சென்று ஒரு பிரமாண்ட நந்தி

சிலையை கொண்டு வந்தனர். கோவில் கட்டப்பட்டதும், சிவன் சன்னிதி எதிரில் இந்த நந்தியை பிரதிஷ்டை செய்யலாம் என்று எண்ணிய மக்கள், அதுவரை இந்த நந்தியை 'ஜலவாசம்' என்ற வகையில் குளத்தின் உள்ளேயே வைத்திருக்க முடிவு செய்தனர்.

சாமியார் அருள்வாக்கு

நாட்கள் கடக்க, குளத்திற்குள் இருந்த நந்தியை யாரும் பராமரிக்கவில்லை. இதையடுத்து, இவ்வூரில் கொள்ளை நோய் பரவி பல பேர் உயிரிழந்தனர். இது குறித்து பக்கத்து ஊரில் சாமியாடும் ஒருவரிடம் அருள்வாக்கு கேட்டனர்.

அதற்கு அந்த சாமியார், “தொலைதூர ஊரில் இருந்து ஒரு தெய்வத்தை உங்கள் ஊர் குளத்தில் வைத்திருக்கிறீர்கள். அதற்கு சரியான மரியாதை வழங்கவில்லை. அதுவே, இந்நிலைக்கு காரணம். இதற்கு பரிகாரமாக, அந்த தெய்வத்தின் உடல் முழுவதும் பசுநெய் பூசி வழிபடுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்" என்று கூறினார்.

அதன்படி, கோவில் கட்டி முடித்ததும், குளத்திற்குள் இருந்த நந்தி சிலையை சிவன் சன்னிதி முன்னால் பிரதிஷ்டை செய்து, அதன் உடல் முழுவதும் பசுநெய் தடவி பூஜித்தனர். எவ்வளவு நெய் பூசினாலும் துர்நாற்றம் அடிக்காமலும், ஈ, எறும்பு, பூச்சிகள் மொய்க்காமல் இருப்பதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து நெய் பூசி வழிபடுவதை வழக்கமாக கொண்டுவந்தனர். இதன் காரணமாகவே, இவர் 'நெய் நந்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

நெய்மணம் கமகமக்க..

ஊரின் நடுவே கோவில் அழகுற அமைந்துள்ளது. கோவிலில் நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவபெருமான் சன்னிதியை நோக்கி நெய் நந்தீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே 'சக்கரம்' ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது. இவ்வூர் மக்கள், நெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டாக வைப்பதையும், பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக அணிவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நெய் நந்தீஸ்வரரை தரிசிக்க வருகிறவர்கள், கலப்படமில்லாத சுத்தமான பசுநெய் கொண்டு வருகிறார்கள். சொந்த வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள், நோயால் அவதிப்படுபவர்கள் நெய் நந்தீஸ்வரருக்கு மணி சாற்றுவதாக வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், வெண்கல மணி, பட்டுத் துண்டு, மாலை ஆகியவை வாங்கி நெய் நந்தீஸ்வரருக்கு சாற்றுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில்
நெய் கிணறு

நந்தி விழா

வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு ‘நந்தி விழா’ கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து, 30 வகையான மாலைகளால் அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டி வழிபடுகின்றனர்.

நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய், நந்தீஸ்வரரின் உடல் முழுவதும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கிறது. மறு நாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய் கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. அங்கு உறைந்திருக்கும் நெய்யில்கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.

சிவபெருமானுக்கு இணையாக நந்தி வழிபாடு

இக்கோவிலுக்கு வருபவர்கள், மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரரை தரிசிப்பதோடு, சிவ குடும்பத்துப் பிள்ளையான நந்திகேஸ்வரரையும் நெய்மணம் கமழ தரிசித்து மகிழ்கின்றார்கள். பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு இணையாக நந்தி எம்பெருமான் வணங்கப்படுகிறார். எல்லாம் வல்ல இறைவனே போற்றும் நந்தி எம்பெருமானை ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் சிவபெருமானை வணங்குவதற்கு முன்பாக வணங்கி, அவரின் அருள் பெறுவது வாழ்வின் சிறப்பாகும்.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

அமைவிடம்

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பல ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் வேந்தன்பட்டி உள்ளது. வேந்தன்பட்டி வருவதற்கும் பஸ் வசதிகள் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com