

களக்காடு,
களக்காடு அருகே சிதம்பரபுரம் நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமந் நாராயணசுவாமி கோயில் உள்ளது. அய்யா நாராயணசுவாமி இங்கு நரசிம்ம அவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் கடந்த 1929ம் ஆண்டு முதல், முறையாக தேரோட்டம் நடந்தது. அதனைதொடர்ந்து ஆண்டு தோறும் ஆனி மாதம் 12 நாட்கள் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 96வது ஆனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடைகளும் நடத்தப்பட்டன. உகப்படிப்பு வாசிக்கப்பட்டது. அதன் பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார்.
தொடர்ந்து காலை 7.05மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் 8ம் நாளான ஜூலை 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு பகவான் வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டையாடுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா, ஜூலை 6ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. விழாவையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.