

சிதம்பரம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வாகன வீதி உலா நடைபெற்றது.
வெள்ளி சந்திர பிறை வாகனம், தங்க சூரிய பிறை வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்க கைலாச வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் முடிந்ததும் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ரகசிய அறையில் எழுந்தருளினர். அங்கு நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.
இன்று பிற்பகல் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி புறப்பட்ட நடராஜப் பெருமான்- சிவகாமசுந்தரி, கோவில் கருவறைக்கு சென்றனர்.
நடராஜரின் திருநடன காட்சியை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆனிதிருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.