கவசம் இல்லாமல் அருள்பாலித்த ஆதிபுரீஸ்வரர்.. தரிசனம் செய்ய திருவொற்றியூரில் குவிந்த பக்தர்கள்

நேற்று நள்ளிரவில் அர்த்தஜாம பூஜை நடைபெற்ற பிறகு ஆதிபுரீஸ்வரர் மீது மீண்டும் கவசம் சாத்தப்பட்டது.
திருவொற்றியூரில் கவசம் இன்றி அருள்பாலித்த ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
Published on: 

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் கவசம் இல்லாமல் அருள்பாலித்த ஆதிபுரீஸ்வரரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் மீது அணிவிக்கப்பட்டிருந்த, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாக கவசம், கார்த்திகை பவுர்ணமியையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே கவசம் இல்லாமல் அருள்பாலிக்கும் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக முதல் நாளில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடைசி நாளில் குவிந்த பக்தர்கள்

நேற்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். முதல் 2 நாட்களை காட்டிலும் நேற்று காலை ஒரே நேரத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் திருவொற்றியூர் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.

வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெரு முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் பூந்தோட்டப் பள்ளி வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

நள்ளிரவு வரை தரிசனம்

பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. நள்ளிரவில் அர்த்தஜாம பூஜை நடைபெற்ற பிறகு ஆதிபுரீஸ்வரர் மீது மீண்டும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாக கவசம் சாத்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான கவசம் இல்லாத ஆதிபுரீஸ்வரர் தரிசனம் நிறைவடைந்தது.

X