சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வழிபாட்டின் பலன், மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை, கோவில் குளத்திலும், ஆற்றிலும் கரைப்பது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி, சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்
Published on: 

சென்னை,

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை தவிர, மற்ற மாதங்களில் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால், சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமி தினத்தில் மட்டும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்ன அலங்காரத்தில் சிவனை வழிபட்டால் ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். வழிபாட்டின் பலன், மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை, கோவில் குளத்திலும், ஆற்றிலும் கரைப்பது வழக்கம்.

அந்தவகையில் நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. அதன்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில், கொரட்டூர் ஏகாந்த லிங்கேசுவரர் கோவில் உள்ளிட்ட நகரின் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று மாலை 6 மணி முதல், அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அனைத்து பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது
அன்னாபிஷேகம்

திருவானைக்காவல்

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள குபேர லிங்கத்திற்கு 40 படி அரிசி சாதம் வடித்து, அன்னாபிஷேகம் நடந்தது. காய்கறிகளை கொண்டு குபேர லிங்கத்திற்கு மாலை மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சுருட்டுப்பள்ளி சிவன் கோவில்

திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், மூலவர் வால்மீகேசுவரருக்கு அன்னப்பிரசாத அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன.

கோவில் அர்ச்சகர்களும், பக்தர்களும் கோவில் வளாகத்தில் உள்ள புனித தீர்த்தத்தில் சிறிது அன்னப்பிரசாதத்தை கலந்தனர். விவசாயம் செழிக்கவும், மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் இந்தப் பூஜை ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகிறது. தொடர்ந்து சாமிக்கு அலங்கரிக்கப்பட்ட அன்னப்பிரசாதத்தை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com