

ஶ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுக்கு நான்கு திருவிழாக்கள் நடைபெறும். மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் நம்மாழ்வார்க்கும், பங்குனி மாதம் மற்றும் சித்திரை மாதம் ஆதிநாதருக்கும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மாசித் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 ஆம் திருவிழாவான கடந்த 2 ஆம் தேதி இரவு கருட சேவை நடைபெற்றது. தினசரி காலை தோளுக்கினியானில் ரதவீதி புறப்பாடும் மாலை 6.30 மணிக்கு பரங்கி நாற்காலி, பூம்பல்லாக்கு, புன்னைமர வாகனம், திருப்புளியடி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. 10ம் திருநாளான கடந்த 7 ஆம் தேதி பொலிந்து நின்றபிரான் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கடந்த 8 ஆம் தேதி ராமானுஜர், கூரத்தாழ்வார், பிள்ளைலோகாச்சாரியா் தேசிகர் ஆச்சாரியார்களுடன் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
கடந்த 9 ஆம் தேதி தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. நவதிருப்பதிகளில் 6-வது திருப்பதியான தொலைவில்லிமங்கலம் கோவிலில் (இரட்டை திருப்பதி) நேற்று சாத்துமுறை நடந்தது.
மார்கழி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின்போது தொலைவில்லிமங்கலம் கோவிலில் பழங்கால முறைப்படி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளி சாத்துமுறை நடைபெறுவது வழக்கம். கால மாற்றத்தின் காரணமாக நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளாததால் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நம்மாழ்வார் திருவிழா முடிந்த மறுநாள் தொலைவில்லி மங்கலம் எழுந்தருளி சாத்துமுறை நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று சாத்துமுறை நடைபெற்றது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நம்மாழ்வார் விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி நடந்தது. பின்னர் நம்மாழ்வார் 7 மணிக்கு புறப்பட்டு அப்பன் கோவில் விடையாற்று, 7.50 மணிக்கு புறப்பட்டு தொலைவில்லிமங்கலம் விடையாற்று, 8.15 மணிக்கு புறப்பட்டு இரட்டை திருப்பதி வந்தடைந்தார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மண்டபத்திற்கு முன் கட்டிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நம்மாழ்வார், தேவர்பிரான் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக மண்டபத்தில் எழுந்தருளி இருவருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நம்மாழ்வார் முன்னிலையில் தேவர்பிரான் சாத்து முறை நடந்தது. 6.45 மணிக்கு தீர்த்தம், சடாரி, சாத்துமுறை துளசி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நம்மாழ்வார் விடைபெற்று ஆழ்வார்திருநகரி வந்தடைந்தார். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.