

திருவண்ணாமலை,
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 5.57 மணி அளவில் தொடங்கியது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 5.57 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். தொடர்ந்து நேற்று காலையில் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. காலை சுமார் 10 மணிக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
முன்னதாக நேற்று அதிகாலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம், கூட்டமாக வந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆனி மாத பவுர்ணமி கிரிவலமானது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.16 மணியளவில் நிறைவடைந்தது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரையில் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி கிரிவலம் சென்ற பக்தர்கள் தங்கள் பகுதிக்கு எந்தவித சிரமமுமின்றி திரும்பி சென்றனர்.