திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனிவார ஆஸ்தான விழா

ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தான விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தான விழா
Published on

திருப்பதி,

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாஸ்திர முறைப்படி ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி மாதம் பாரம்பரிய முறைப்படி பகவானிடம் வரவு- செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு ஆனிவார ஆஸ்தானம் என்று பெயர். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனிவார ஆஸ்தானம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு தங்க வாசல் முன்புள்ள கண்டா மண்டபத்தில், ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளினார். விஷ்வக்சேனரும் தனி பீடத்தில் எழுந்தருள, மூலவருக்கும் உற்சவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் பெரிய ஜீயர் சுவாமிகள் ஆறு பெரிய பட்டுப் புடவைகளை வெள்ளித் தட்டில் சுமந்து மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்தார். அவற்றில் நான்கு மூலவருக்கும், ஒன்று மலையப்ப சுவாமிக்கும், மற்றொன்று விஷ்வக்சேனருக்கும் அணிவிக்கப்பட்டது.

அர்ச்சகர்கள் கோவிலின் தங்க வாசலில் ஒரு தங்கத்தட்டில் சிறிதளவு அரிசியை பரப்பி அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து “நித்ய ஐஸ்வர்யோ பவ” என கூறி மூலவர் ஏழுமலையானை பிரார்த்தனை செய்தனர். அப்போது பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்பட்டது. அந்தக் காணிக்கைகள் மூலவர் பாதத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டு, பிரதான உண்டியலில் செலுத்தி புதிய வரவு- செலவு கணக்கு தொடங்கப்பட்டது.

அடுத்ததாக ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி ஆகியோரின் வலது கையில் கோவிலின் சாவிக்கொத்து வழங்கப்பட்டது. தீபாராதனை, தீர்த்தம், சடாரி மரியாதைகள் முடிந்ததும் அந்த சாவிக்கொத்து பெருமாள் திருவடியில் வைக்கப்பட்டு ஆனிவார ஆஸ்தானம் நிறைவுற்றது.

ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com