

சென்னை:
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னக்கூட உற்சவம் நடைபெற்றது.
கோகுலத்தில் வசித்த மக்கள், மழைக்காக இந்திரனை வழிபட்டு வந்த நிலையில், இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் கோவர்த்தன மலையை வழிபடுமாறு பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்தினார். இதனால் கோபமடைந்த இந்திரன் கோகுலத்தில் கடும் மழை, புயலை ஏற்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது சுண்டு விரலில் தூக்கி ஏழு நாட்கள் குடையாகப் பிடித்து அனைவருக்கும் அடைக்கலம் அளித்தார். பின்னர் இந்திரனின் ஆணவம் அடங்கியதாகவும் புராண வரலாறு தெரிவிக்கிறது.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கோவர்த்தன பூஜை மற்றும் அன்னக்கூட உற்சவம் கொண்டாடப்படுகிறது. இயற்கை, மலை, கால்நடைகள் மற்றும் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பெருமாளுக்கு பல்வேறு வகையான உணவுகளை மலை போலக் குவித்து நைவேத்யம் செய்யப்படுகிறது. வடமொழியில் ‘அன்னம்’ என்றால் உணவு (சாதம்) என்றும், ‘கூடம்’ (கூட் / Koot) என்றால் மலை அல்லது குவியல் என்றும் பொருள்.
இந்த சிறப்புமிக்க உற்சவம் சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பவளவண்ணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவர்த்தன மலையைத் தனது சுண்டு விரலில் தூக்கி நிற்கும் கிருஷ்ணர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெருமாளுக்கு சாம்பார் சாதம், புளியோதரை உள்ளிட்ட பல்வேறு வகையான சாதங்கள், பல வகையான இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகள் நைவேத்யம் செய்யப்பட்டன. பின்னர் இந்த உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த அன்னக்கூட உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவர்த்தன கிருஷ்ணரையும், பவளவண்ணப் பெருமாளையும் தரிசித்து, அன்னப் பிரசாதங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.
அன்னக்கூட உற்சவத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் வாழ்வில் உணவுப் பஞ்சம் ஏற்படாது, குடும்பத்தில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.