திருப்பதியில் 31 காத்திருப்பு அறைகளில் நிரம்பிய பக்தர்கள்.. சர்வதரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆகலாம்

திருப்பதியில் உள்ள பிரதான உண்டியல்களில் நேற்று காணிக்கையாக 4.58 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Published on

திருமலை,

திருப்பதியில் இன்று 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பி உள்ளதால், 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் சர்வதரிசனத்திற்கு சுமார் 12 மணி நேரம் ஆகலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். காத்திருப்பு அறைகளில் பெரும்பாலான அறைகள் நிரம்பிவிடுகின்றன. நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பெறாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 687 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 938 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று பக்தர்கள் பிரதான உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 36 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 5 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 19 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அலிபிரி மலைப்பாதை சோதனைச்சாவடியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
அலிபிரி சோதனைச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

ரூ.4.58 கோடி காணிக்கை

நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி. நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று 78 ஆயிரத்து 310 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 573 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக 4.58 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். 4.14 லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. 2.52 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி திருப்பதியில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 காத்திருப்பு அறைகள் நிரம்பி உள்ளன. இதனால் 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வதரிசனத்திற்கு சென்றுள்ள பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்ய தோராயமாக 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய முடியும். 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி முதல் 5 மணி நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும். ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட் உள்ளவர்கள், 1 மணி முதல் ஒன்றரை மணி நேரத்திற்குள் தரிசனம் செய்து திரும்பலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com