

திருமலை,
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோடை விடுமுறை சமயங்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். அவ்வகையில் இந்த கோடை விடுமுறையிலும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது.
வார இறுதிநாட்களையொட்டி தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வந்ததால் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் புதிய பக்தர்களை காத்திருப்பு வரிசைக்குள் அனுமதிப்பதை தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், "திருமலையில் சனிக்கிழமை 92 ஆயிரத்து 830 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 60 லட்சமாக பதிவாகியுள்ளது. மேலும் 48 ஆயிரத்து 987 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். லட்டு விற்பனை 4 லட்சத்து 64 ஆயிரமாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 3.37 லட்சமாகவும் பதிவாகியுள்ளது. மருத்துவ சேவைகளை 4,069 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், காத்திருப்பு அறைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கோகர்பம் அணை வட்டச்சாலை அருகிலுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 முதல் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சாதாரண பக்தர்களுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை அளித்து, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது” என்றனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று மொத்தம் 95,094 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 35,909 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.3.93 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 4.66 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. 3.23 பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர். மருத்துவ சேவைகளை 4,112 பக்தர்கள் பயன்படுத்தி உள்ளனர். பக்தர்களின் காத்திருப்பு அறைகள் நிரம்பிய நிலையில், சிலாதோரணத்திற்கு வெளிப்புறம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சர்வ தரிசன டோக்கன் பெறாமல் சென்ற பக்தர்கள், தரிசனத்திற்கு 20 மணி சமுதல் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, திருப்பதி செல்லும் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு, நேரம் குறிப்பிடப்பட்ட சர்வதரிசன டோக்கன்களை பெற்று செல்வது நல்லது. இவ்வாறு நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களை பெற்று, அந்த சமயத்தில் கியூ காம்ப்ளக்ஸ் சென்று வரிசையில் நின்றால், 3 மணி முதல் 6 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்யமுடியும். பருவகாலம் மற்றும் தினசரி பக்தர்களின் வருகை எண்ணிக்கையைப் பொறுத்து இந்த நேரம் சற்று மாறுபடும். அதாவது, விடுமுறை அல்லாத சாதாரண நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், மிக விரைவாக தரிசனம் செய்யமுடியும்.
இந்த டோக்கன்கள் திருப்பதியில் ரெயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம், பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் காம்ப்ளக்ஸ், அலிபிரி கேட் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்படும். மறுநாள் தரிசனத்திற்கு முந்தைய நாள் இரவு 12 மணிக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். இந்த டோக்கன்களை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் தேவை. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் செயல் அதிகாரி சி.வெங்கையா சவுத்ரி உத்தரவின்பேரில் தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீவாரி சேவகர்களுடன் இணைந்து, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வரிசைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.