

கன்னியாகுமரி:
அய்யா வைகுண்டரின் பஞ்சபதிகளில் மூலப்பதியாக முட்டப்பதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதி விளங்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரையில் வங்கக்கடலோரம் இந்த முட்டப்பதி அமைந்து உள்ளது.
இங்கு அய்யா வைகுண்டசாமியின் 194 -வது அவதார தினவிழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் உகப்படிப்பும் நடக்கிறது.
அதன்பின்னர் பால் அன்னம், பூந்தி, லட்டு, பொங்கல், பழம், பாயாசம், சர்க்கரை பொங்கல், இனிப்பு போன்ற தான தர்மங்கள் வழங்குதல் நடக்கிறது.
மதியம் 12 மணி முதல் மணிமுதல் மாலை 5 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் உகப்படிப்பும் நடக்கிறது.
இந்த விழாவில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ,தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதிகளில் இருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு காவி உடை அணிந்து நெற்றியில் திருநாமம் இட்டு வருவார்கள்.
அவர்கள் முட்டப்பதி வெள்ளியல் பாறையில் உள்ள பாற்கடலில் புனித நீராடி, அதன்பிறகு "அய்யா அரகர சிவ சிவா" என்று பக்தி கோஷம் எழுப்பியபடி பதியை சுற்றி வலம் வந்து அய்யாவை வழிபடுவார்கள்.
இதனால் அன்றைய தினம் முட்டப்பதி கடலில் புனித நீராட அய்யா வழி பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்கான ஏற்பாடுகளை முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் தர்மகர்த்தாக்கள் கே.மனோகரசெல்வன், கே. எம்.கைலாஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.