

கோவை:
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்த்திருவிழாவின் முதல் நிகழ்வான பூச்சாட்டு விழா கடந்த 17ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 24-ம் தேதி இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியர்கள் பக்தர்கள் சூழ சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, கோவில் மகா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர். தொடர்ந்து கோவில் முகப்பில் மூன்று கம்பம் நடப்பட்ட பகுதியில் தாரை தப்பட்டை முழங்க அக்னி சாட்டு நடந்தது.
நாளை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மார்ச் 3-ம் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் உற்சவர் கோனியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்லக்கில் எழுந்தருளி ராஜவிதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு வந்தடைகிறார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள்கிறார்.
மதியம் 2.05 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். திருத்தேரில் எழுந்தருளி நகர வீதிகளில் வலம் வரும் கோனியம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளனர்.
மார்ச் 6-ம் தேதி தெப்ப உற்சவம், 7-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.