

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 16-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் எழுந்தருளி, சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவீதி உலா நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை மீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் பாரம்பரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும், குண்டத்திற்கு தேவையான மரங்கள் வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் படைக்கலத்துடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம், புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் குணடத்தில் உள்ள நெருப்பினை மூங்கில் கம்புகளால் தட்டி சீராக பரப்பி 15 அடி நீளம் 10 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்கலம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது. பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், பண்ணாரி அம்மனை போற்றி முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குண்டம் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். காலை 10:30 மணிக்கு அவர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து அம்மனின் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். மதியத்திற்கு மேல் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரியம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க ரத ஊர்வலம் நடைபெறுகிறது. மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.