இன்று பரணி தீபம்! வீட்டில் 5 தீபங்களை எவ்வாறு ஏற்றவேண்டும்?

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று எமதர்மராஜாவை வேண்டி பரணி தீபம் ஏற்றுவதால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் பரணி தீபம் எவ்வாறு ஏற்றவேண்டும்?
பரணி தீபம்
Published on: 

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினமான இன்று மாலை வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். வீட்டு வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். வீட்டினுள் ஏற்றப்படும் 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும்.

பரணி தீபம் ஏற்றும் முறை

ஒரு தாம்பாலத்தில் 5 அகல் விளக்குகளை வெளிப்புறமாகப் பார்த்தபடி, ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்குமாறு வட்டமாக வைத்து தீபத்தை ஏற்றவேண்டும். ஒவ்வொரு தீபத்திற்கும் தலா ஒரு மலர் வைக்கவேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது நல்லது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும், பஞ்ச பூதங்களையும் குறிக்கும் வகையில் பரணி தினத்தன்று 5 விளக்குகள் ஒன்றாக ஏற்றப்படுகின்றன,

இந்த ஐந்து தீபங்கள் தவிர, நிலை வாசல், மாடி, துளசி மாடம் மற்றும் வீட்டின் மற்ற பகுதிகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

பலன்கள்

வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று மாலை 6 மணிக்கு மேல் பரணி தீபம் ஏற்றி வழிபடலாம். இன்று திங்கட்கிழமை (கார்த்திகை சோமவாரம்) என்பதால் சிவபெருமானை வழிபடுவதும், சிவபுராணம் அல்லது கந்தர் அலங்காரம் போன்ற பதிகங்களைப் படிப்பதும் சிறப்பு. பரணி தீபம் ஏற்றி வழிபடுவதால் பாவங்கள் நீங்கும், எம பயம் குறையும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் செழிப்பும் நீண்ட ஆயுளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

X