

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு நிற இக்ஸோரா (வெட்சி) மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூரிய பிரபை வாகனம் அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றல், உயிர்சக்தி மற்றும் நல் வாழ்வை வழங்கும் சூரிய பகவானை குறிக்கிறது. இயற்கைக்கு ஒளியூட்டும் மூலமாகவும், சந் திரனுக்கும் கூட ஒளியளிக்கும் சக்தியாகவும் சூரியனை வேதங்கள் விவரிக்கின்றன.
சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சிறந்த சந்ததி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேகமூட்டத்துடனும், லேசான தூறலுடனும் தொடங்கிய இந்த வாகன ஊர்வலம் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. வாகன வீதிஉலா புஷ்கரணி பகுதியை அடைந்தபோது, தைத்திரீய உபநிடதத்தில் உள்ள சூரிய மந்திரங்கள் பக்தியுடனும் தாளலயத்துடனும் முழங்க, மேகக் கூட்டங்களுக்கு ஊடே சூரியனின் கதிர்கள் வெளிப்பட்டன. இந்த அற்புதமான காட்சியை கண்ட பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்துடன் 'கோவிந்தா... கோவிந்தா...' என விண்ணதிர முழக்கமிட்டனர்.
சூரியபிரபை வாகன வீதிஉலா முன்னால் 14 குழுக்களை சேர்ந்த மொத்தம் 411 கலைஞர்கள் பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலை வடிவங்கள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகளை வழங்கினர். அதில் புதுச்சேரியில் இருந்து கரகாட்டம். பஞ்சாபில் இருந்து பாங்க்ரா, திருப்பதி மற்றும் கத்தாரில் இருந்து பரதநாட்டியம், துபாயில் இருந்து குச்சிப்புடி, தெலுங்கானாவில் இருந்து லம்பாடி நடனம், கர்நாடகாவின் கஜேந்திர மோட்சம், சிக்கிமில் இருந்து மருனி நட னம், மத்திய பிரதேசத்தில் இருந்து கதக் ஆகியவை பக்தர்களை கவர்ந்தன.
அதில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்திய என்.சங்கீதாவின் கரகாட்டம் குழு (புதுச் சேரி), ஹர்தீப் சிங் அவுஜ்லாவின் பாங்க்ரா குழு (பஞ்சாப்). ஸ்ரீவெங்கடேஸ்வரா இசை மற்றும் நடனக் கல்லூரி (திருப்பதி), சுசித்ரா பூவாஞ்சலிலின் பரதநாட்டியக் குழு (கத்தார்) மற்றும் பிரீத்தியின் குச்சிப்புடி குழு (துபாய்) ஆகிய 5 குழுக்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா, ரவிச்சந்திரா பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வதுநாளான இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியில் இருந்து 10 மணிவரை தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.