

சேலம்:
சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
சேலம் நகரின் மையத்தில், 300 ஆண்டுகள் பழமையான ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, தங்கக் கவசத்தில் ராஜகணபதி காட்சியளித்தார். உற்சவர் சர்வ அலங்காரத்துடன் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின் தினமும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. உற்சவர் விதவிதமான வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. முதல் முறையாக திருத்தேரில் வலம் வந்த விநாயகப் பெருமானை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
சேலம் ராஜகணபதி கோவிலில் கொடிமரம் ஸ்தாபிக்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு அந்த குறை நீங்கியது. கடந்த மாதம் 16-ம் தேதி கருவறை எதிரில், 15 அடி உயரத்தில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து 30-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மண்டல பூஜை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ராஜகணபதிக்கு, 21 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புதிதாக பிரதிஷ்டை செய்த கொடி மரத்துக்கு காலை 7:00 மணிக்கு அபிஷேகம் செய்து, முதன் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டு, உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.