

“சிந்துரச் செம்பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின்று உய்துங்கொலோ”
-இது ஆண்டாள் அருளிய 'நாச்சியார் திருமொழி' பாசுரங்களில் ஒன்று.
திருமால் மீது அளவற்ற பக்தியும் காதலும் கொண்டிருந்த ஆண்டாள், திருமாலின் வரவுக்காக காத்திருந்து வாடிப்போயிருந்தார். அப்போது தனது நிலையை இந்த பாசுரத்தில் அழகாக விவரித்திருக்கிறார்.
‘திருமாலிருஞ்சோலையில், பல வண்ணங்கள் கொண்ட சிவந்த சிந்தூரச் செம்பொடி போல் வண்ணத்துப் பூச்சிகள் வண்ண மயமாக எங்கும் பரவியுள்ளன. மந்தர மலையால் பாற்கடலைக் கடைந்து, இனிய அமுதமாகிய திருமகளைக் கரம்பிடித்த அந்த சுந்தரத் தோளுடைய எம்பெருமான் மீதான காதல் என்னும் சுழலில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன்?’ என்கிறாள் ஆண்டாள்.
ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், 5 வைணவ தலங்களைப் பற்றி ஆண்டாளிடம் மிகவும் சிறப்பித்து கூறியிருக்கிறார். அதில் ஸ்ரீரங்கம், திருப்பதி, அழகர்கோவில் முக்கியமானவை. இந்த கோவில்களுக்கு மகளை அழைத்துச்சென்று அந்த ஊர்களில் சில காலம் தங்கியும் உள்ளார்.
அவ்வாறு கள்ளழகர் கோவில் பகுதியில் ஆண்டாள் தங்கியபோது இறைவன் மீதான பக்தியின் வெளிப்பாடாக சுந்தரராஜ பெருமாளான மூலவரைப்பற்றியும் உற்சவரான அழகரைப் பற்றியும் பல பாசுரங்களை பாடி இருக்கிறார். அதில் மேற்கண்ட பாசுரத்தில் சுந்தரத்தோளுடையான் என போற்றியது மட்டுமல்லாமல் அழகுக்கே ராஜாவான சுந்தரராஜனை மானசீகமாக நேசித்தும் பாக்கள் எழுதியுள்ளார்.
அதில் சில பாடல்கள் அழகர்கோவிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் உள்ள பிணைப்பை இக்காலம் மட்டுமின்றி எக்காலமும் அறியும்படி செய்திருக்கின்றன.
அதில் ஒரு பாடலில் ஸ்ரீரங்கம் பெருமாளை நான் மணந்தால் தலா 100 பெரிய பாத்திரங்களில் வெண்ணெய், அக்கார அடிசல் (சர்க்கரை பொங்கல் போன்ற பெருமாளுக்கு பிடித்த உணவுப்பொருள்) படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என்றும், தன் வேண்டுதல் நிறைவேற அழகர் அருள் புரிய வேண்டும் என்று அந்த பாடலை ஆண்டாள் இயற்றி இருந்தார். அவ்வாறு அருள் கிடைத்து ஆண்டாள், ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருடன் ஐக்கியமானார்.
ஆனால், ஆண்டாளின் நேர்த்திக்கடன் அழகருக்கு செலுத்தப்பட்டதா? என்பதில் பிற்காலத்தில் வந்த ராமானுஜருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே ஆண்டாள் வேண்டியபடி தலா 100 பெரிய பாத்திரங்களில் வெண்ணெய், அக்கார அடிசல் தயார் செய்து படைத்து வழிபட்டார். அந்த கையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு ராமானுஜர் சென்றார். சன்னதியில் வீற்றிருந்த ஆண்டாளோ, தன் சார்பில் தன் வேண்டுதலை ராமானுஜர் நிறைவேற்றியதை அறிந்து அகமகிழ்ந்தார். ராமானுஜரை ‘அண்ணா...’ என அசரீரியாக அழைத்து ஆண்டாள் வரவேற்றதாக நம்பப்படுகிறது.
ஆண்டாள் காலம் வேறு, ராமானுஜர் காலம் வேறு. நூற்றாண்டுகள் இடைவெளியும் உண்டு. இருந்தாலும் ‘மகனே’ என்று அழைக்காமல் ‘அண்ணா...’ என அழைத்தது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆண்டாள் மீது அழகருக்கு அதிக பரிவு உண்டு. அதனால் தன் கோவிலில் ஆண்டாளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். மற்ற தலங்களில் ஆண்டாள் நின்ற கோலத்தில் காட்சி தருவதும் அழகர்கோவிலில் மட்டும் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புராண காலத்துடன் உள்ள தொடர்பினால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஆண்டாள், அழகர் என பெயர் சூட்டுவது மரபாக இருந்து வருகிறது. இரட்டைக்குழந்தைகள் பிறந்தால் ஆண் குழந்தைகளாக இருப்பின் ராமன், லட்சுமணன் என பெயர் சூட்டுவது போல், ஆண், பெண் குழந்தைகளாக இருந்தால் ராமன், சீதை, விஷ்ணு, லட்சுமி என சூட்டுவதுபோல் ஆண்டாள், அழகர் என சூட்டுவதும் தென்மாவட்டங்களில் பின்பற்றப்படுகிறது.
அழகர் மீது ஆண்டாள் வைத்துள்ள பக்திக்கு சித்திரை திருவிழாவிலும் ஓர் முக்கிய நிகழ்வு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை வந்து, அதை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார், அழகர்.
பக்தர்கள் கொடுக்கும் மாலையை இறைவன் ஏற்பது வழக்கமானது. ஆனால், ஆண்டாள் சூடிய மாலையை அழகர் ஏற்பது சிறப்பிலும் சிறப்பு. வைகையில் அழகர் இறங்கும் வைபவத்துக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் மங்கலப்பொருட்கள் அனுப்பும் பாரம்பரியம் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையுடன் வைகையில் இறங்குகிறார் அழகர். இந்த நாளில் அழகரை தரிசித்து ஆனந்தம் அடைவோம்!