

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்று விட்டார். அதன்பின்னர் தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மன்மதன் மலர்க்கணையை ஏவி சிவபெருமானின் தியானத்தை கலைத்தார். சிவபெருமான் மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.
இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில் லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்மவினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.